மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள் ஒதுக்கீட்டுக்கு 2 வாரத்தில் ஆளுநர் ஒப்புதல்?
மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள் ஒதுக்கீட்டுக்கு 2 வாரத்தில் ஆளுநர் ஒப்புதல்?
By : Kathir Webdesk
மருத்துவ கல்லூரி சேர்க்கையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூடிய விரைவில் நல்ல முடிவினை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 300 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.
மருத்துவ கல்லூரி இளநிலை படிப்பில் சேர்வதற்கான அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து ஒரு மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா தற்போது கவர்னர் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடினமாக இருப்பதால் அவர்கள் மருத்துவக் கல்வி பயில இந்த மசோதாவுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகு இளநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கவர்னரை சந்தித்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி சண்முகம், அன்பழகன், விஜயபாஸ்கர் ஆகியோர் கவர்னரை நேரில் சந்தித்து இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்குமாறு தெரிவித்தனர்.
கவர்னர் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் "முதல்வரின் ஆணையின்படி உள்ஒதுக்கீடு விவகாரங்களில் நல்ல முடிவினை எடுக்குமாறு ஆளுநரை சந்தித்து பேசினோம். 'இந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் நன்றாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பயன் அடைவர்' என்று ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். அவரும் நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்" என்று அமைச்சர் கூறினார்.
தற்போது இரண்டு வாரங்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் விரைவில் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்றும் அதன் பின் உடனடியாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் ஒப்புதல் தர வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.