நெல்லை: சிமெண்ட் தொழிற்சாலையில் பைப் வெடிகுண்டு கண்டுப்பிடிப்பு.!
நெல்லையில் இயங்கி வரும் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையில் 2 பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By : Thangavelu
நெல்லையில் இயங்கி வரும் இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையில் 2 பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சூப்பர் கிங்ஸ் உரிமையாளராக இருப்பவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமாக இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை, நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரில் உள்ளது. அங்கு 100க்கும் அதிகமான நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா முழுஊரடங்கு காலத்தில் நெல்லை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றிய பலரை ஆலை நிர்வாகம் வேலையில் இருந்து விடுவித்துள்ளது. இதனால் பலர் வேலையிழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று பணிக்கு வந்த சிலர் தொழிற்சாலை உள்ளே குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்காக இரண்டு பைப் வெடிகுண்டுகளை வைத்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஆலை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது வேலையில் இருந்து விடுவித்த சிலர்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், பைப் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிமெண்ட் தொழிற்சாலையில் வெடிகுண்டு வைத்த சம்பவம் நெல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
