பள்ளிப் பாடத்திட்டத்தில் 40% குறைப்பா? அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!
பள்ளிப் பாடத்திட்டத்தில் 40% குறைப்பா? அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!
By : Kathir Webdesk
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வை மட்டும் 40 சதவிகித பாடங்களைக் குறைத்துவிட்டு நடத்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மட்டும் இப்போதைக்கு திறப்பதில்லை என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளதால் தேர்விற்கான தேதி அறிவிக்கப்பட வேண்டிய சூழலில் அதுபற்றி விவாதிக்க ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தலைமை செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் பழனிச்சாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் கருப்புசாமி, NCERT இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை முழுமையாக நடத்த முடியாத நிலையில் தேர்விற்கான பாடத் திட்டத்தை 40% வரை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியர் கழக தலைவர் இளமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் தேர்விற்கான பாடங்கள் 40% குறைக்கப்படுமா என்று அரசு தரப்பில் அதிகாரப் பூர்வமான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால் இளமாறன் மற்றும் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் ஆகியோர் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளனர். எனவே பள்ளிகள் திறப்பு மற்றும் பாடங்கள் குறைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. இது மாணவர்கள் தேர்வினை எதிர்கொள்ளும் அளவிற்கு போதியதாக இல்லை என்றும் அதனால் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுமா அல்லது பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது போன்ற அச்சங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பரவலாக இருந்து வருகிறது.