8 மணி நேரம்.. விடிய.. விடிய.. மழை.. வெள்ளத்தில் மிதக்கும் வேலூர்..!
8 மணி நேரம்.. விடிய.. விடிய.. மழை.. வெள்ளத்தில் மிதக்கும் வேலூர்..!
By : Kathir Webdesk
வங்க கடலில் ஏற்பட்ட நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மாமல்லபுரம் இடையே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது. அதைத்தொடர்ந்து நிவர் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்தது.
அதனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது. இரவு 10.30 மணி முதல் மழையின் வேகம் அதிகரித்தது. விடிய, விடிய மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 38 செ.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் மிதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூரில் பல இடங்களில் இடைவிடாது மழை பெய்தது. சில சமயங்களில் இடி சத்தம் கேட்டது. தொடர்ச்சியாக வேலூர் மாநகரில் மதிய வேளையில் பலத்த காற்று வீச தொடங்கியது.
பொது விடுமுறை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. கனமழை காரணமாக வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காட்பாடிசாலை, ஆற்காடுசாலை, ஆரணிசாலை, பெங்களூரு சாலை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன.
வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை வெள்ளம் சூழந்தது. பல இடங்களில் ஆறுபோன்று மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வேலூர் கன்சால்பேட்டை காந்திநகர், இந்திராநகர், காட்பாடி உட்பட 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மீட்பு பணிகளில் மாநகாரட்சி ஊழியர்கள் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்பும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.