களத்தில் குதித்த ABVP, பின் வாங்கிய பல்கலைக்கழகம், அருந்ததி ராய் புத்தகத்துக்கு டாட்டா!
களத்தில் குதித்த ABVP, பின் வாங்கிய பல்கலைக்கழகம், அருந்ததி ராய் புத்தகத்துக்கு டாட்டா!
By : Saffron Mom
தனது தீவிரமான இடதுசாரி சிந்தனைகளுக்கு பெயர் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின்,'வாக்கிங் வித் காம்ரேட்ஸ்' என்ற புத்தகத்தை திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தன்னுடைய பாடத்திட்டத்தில் சேர்த்தது சர்ச்சையைக் கிளப்பியிருந்த வேளையில், ABVPயின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் அப்புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து ஒரு வழியாக நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தீவிரவாதிகளாக வகைப் படுத்தப் பட்டிருக்கும் மாவோயிஸ்டுகளை புகழும் அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க MP கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும். pic.twitter.com/vjKKybSSAR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 12, 2020
பிரிவினைவாத வழக்குகள் தன் மீது கொண்ட, நாட்டை துண்டாட நினைக்கும் ஒரு எழுத்தாளர், ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடும் மாவோயிஸ்ட்களை புகழும் ஒரு புத்தகம் எதற்காக அரசு பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டது என்று விவாதம் நடத்துவதை விட்டு விட்டு, அதை நீக்கியதை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கண்டிப்பது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை..
அப்படியென்றால் அப்புத்தகத்தின் கருத்துகளை அவர் ஆதரிக்கிறாரா? அந்த புத்தகத்தை அரசாங்கம் ஒன்றும் மொத்தமாக தடை செய்து விடவில்லையே..மாணவர்கள் இப்போதும் அதைப் படிக்க விரும்பினால் படிக்கலாம்..ஆனால் அரசாங்கம் எதற்காக தன்னுடைய பாடத் திட்டத்தின் கீழ் அதைப் பயிற்றுவிக்க வேண்டும்?
ABVPயின் கோரிக்கை நியாயமான ஒன்று தானே..இதே பாணியில் நெட்டிசன்கள் அவருடைய கண்டனத்திற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிராக எப்போதும் எழுதும் அருந்ததி ராய்க்கு ஆதரவாக பேசும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு கண்டனங்கள்
— Bharat (@bjpsmtn1) November 12, 2020
அற்புதமான செய்தி. அருந்ததி ராய் இந்தியாவை துண்டாட நினைக்கும் ஒரு சக்தி. இத்தனை நாட்களாக அவருடைய எழுத்துக்கள் நம் பாடப்புத்தகத்தில் இருந்தது வருந்தத்தக்க செய்தி.
— Vaakkaalan (@vaakkaalan) November 12, 2020
இடதுசாரி சித்தாந்தங்களின் சார்பாக மாணவர்களை மூளைச் சலவை செய்வது பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்துமே ஆரம்பித்துவிடுகிறது. ஒரு சிலரே அதைத் தாண்டியும் உண்மையை அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.
எல்லா அரசாங்கங்களும், கல்வி அமைச்சர் பதவி அல்லது முக்கியமான பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பதவி, பாடத்திட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பு ஆகியவற்றை கம்யூனிஸ்டுகளும் இடதுசாரி சித்தாந்தங்களுக்கு சார்ந்தவர்களும் பெரும்பாலும் கேட்டு வாங்கிக் கொண்டனர்.
70 வருடங்களாக பின்னிருந்து இவற்றை இயக்கி வருகிறார்கள். சமீபத்தில் தமிழக பள்ளி பாடத் திட்டங்களுக்கு கூட லயோலா கல்லூரி பேராசிரியர் பாடத் திட்டத்தை வடிவமைத்து அதில் மறைமுகமாக கிறிஸ்தவ கொள்கைகளை புகுத்தியதாக அவரே ஒப்புக் கொண்ட வீடியோ வைரல் ஆனது நினைவிருக்கலாம்.
1990 இல் திருநெல்வேலியில் தமிழக அரசாங்கம் 550 ஏக்கர் பரப்பளவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை நிறுவியது. இது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு கல்வித் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்தியாவில் மிகப்பெரிய தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக வகைப் படுத்தப் பட்டிருக்கும் மாவோயிஸ்டுகளை புகழும் ஒரு புத்தகம் மாணவர்களிடையே அறிமுகப்படுத்துவது ஆபத்தான விஷயம் என்பதை உணர்ந்த அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) அதன் துணை வேந்தர் பிச்சுமணி க்கு ஒரு கடிதம் எழுதியது.
அதில், "மனோன்மணியம் சுந்தரனார் யூனிவர்சிட்டி ஒரு முக்கியமான கல்வி நிறுவனமாகும். அங்கே எண்ணிக்கையில் அடங்காத மாணவர்கள், அறிவுஜீவிகள் படித்துள்ளனர். அருந்ததிராயின் வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் MA ஆங்கிலம் மூன்றாம் பருவத்திற்கு பாடமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் கொடுப்பதை பற்றிய புத்தகம்.
அவர்கள் ஒரு தேச விரோதிகளாக கருதப்படுகிறார்கள். கடந்த மூன்று வருடங்களாக இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது.இந்த புத்தகம் பலவித போராட்டங்களுக்குப் பிறகும் MA ஆங்கில வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது பிரச்சனையை கிளப்பியுள்ளது. இத்தனை வருடங்களாக மாவோயிஸ்டுகளின் எண்ணங்களும் சித்தாந்தங்களும் இளம் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த புத்தகம் தேசவிரோத உணர்வுகளை இளம் வயதில் இருந்து மாணவர்களின் மனதில் விதைத்து தீவிரவாதத்தை தூண்டுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த புத்தகத்தை சேர்த்ததை எதிர்த்து, இந்த புத்தகத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த நடவடிக்கைக்கு பின் இருப்பவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இது பாடத் திட்டங்களில் இருந்து எடுத்துக் கொள்ளப்படாவிட்டால் நாங்கள் போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும்" என்று ABVP மாணவர் அமைப்பு கடிதம் எழுதியிருந்தது.
மூத்த பத்திரிகையாளரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்பினருமான ஸ்ரீராம் கூறுகையில், ஆசிரியர்கள் மாவோயிஸ்டு உறுப்பினர்களை ஒரு கதாநாயகர்களை போல் சித்தரிப்பது இளைஞர்கள் மத்தியில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தற்போது துணைவேந்தராக இருக்கும் பிச்சுமணி அவருடைய மூன்று வருட பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் இந்தப் புத்தகத்தை பாடத் திட்டங்களில் இருந்து நீக்குவதாக உறுதியளித்துள்ளார் என்றும் கூறினார்.