தென்மாவட்டங்களுக்கு நாளை முதல் கூடுதல் பேருந்து இயக்கம்.!
நாளை முதல் (ஏப்ரல் 20) இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இதனால் வெளியூர் செல்பவர்கள் பகல் நேரங்களில் மட்டுமே செல்லும் நிலை உருவாகியுள்ளது.
By : Thangavelu
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தினமும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி நாளை முதல் (ஏப்ரல் 20) இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இதனால் வெளியூர் செல்பவர்கள் பகல் நேரங்களில் மட்டுமே செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் கூடுதலான பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களுக்கு கூடுதலான பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி சென்னை கோயம்பேட்டில் இருந்து நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் இரவு நேரத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த சமயத்தில் தான் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் அதிக அளவில் கோயம்பேடு பேருந்துநிலையம் வருவார்கள். இது போன்ற இடங்களுக்கு செல்வதற்கான பயணநேரம் 10 மணி முதல் 12 மணிநேரம் வரை ஆகும். இரவு நேரத்தில் பேருந்து சேவை இல்லாததால், காலை நேரங்களில் கூடுதலான பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.