1000 குடும்பங்கள் வசிக்கும் கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை இழுத்து மூடிய தி.மு.க அரசு !
By : Dhivakar
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில், கிராமம் ஒன்றில் இயங்கி வந்த அம்மா மினி கிளினிக்கை மூடுவதாக தி.மு.க அரசு எடுத்த முடிவை, அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
"தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், காழ்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது" என்று பல அரசியல் நோக்கர்கள் குற்றச்சாட்டு எழுப்பிவரும் நிலையில், தி.மு.க அரசின் நடவடிக்கைகளும் அக் குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் தான் இருந்து வருகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக் என்ற மாபெரும் திட்டம் ஊரகம் மற்றும் நகரம் என அனைத்து பகுதிகளில் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. மருத்துவமனைக்காக நெடுந்தூரம் நடந்து செல்லும் கிராம மக்களுக்காக அந்த கிராமத்திலேயே ஒரு சிறு மினி கிளினிக் திறந்து, அந்த கிராம மக்களுக்கு மருத்துவ சேவையை செய்து வந்தது அம்மா மினி கிளினிக்குகள்.
அம்மா மினி கிளினிக்குகள் இயங்கி வந்தால் அ.தி.மு.க கட்சிக்கு அரசியல் லாபம் ஏற்பட்டுவிடுமோ? என்ற நோக்கில் தி.மு.க அரசு பல இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை மூடி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில், எடப்பாடி அருகே பொன்னம்பாளையம் என்ற கிராமத்தில், இயங்கி வந்த அம்மா மினி கிளினிக்கை மூடுவதாக அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
"இக்கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்களின் மருத்துவ தேவைக்காக நாங்கள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் 'அம்மா மினி கிளினிக் மூடப்படும்' என்ற அறிவிப்பு எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது" என்று அக் கிராமவாசி ஒருவர் கூறுவது, அக்கிராம மக்களின் மன வேதனையை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.