Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு காலத்தில் அவ்வளோ பிரம்மாண்டமாக இருந்த கோவில் - மதுரை கோட்டை பெருமாள் கோயிலின் தற்போதைய நிலை!

ஒரு காலத்தில் அவ்வளோ பிரம்மாண்டமாக இருந்த கோவில் - மதுரை கோட்டை பெருமாள் கோயிலின் தற்போதைய நிலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Jun 2022 12:24 PM GMT

மதுரை பாலமேடு ரோடு வலையபட்டி அருகே மறவபட்டி கிராம மலையடிவாரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோட்டைச் சுவருடன் கூடிய 700 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோட்டைச் சுவருக்குள் அம்மன், பெருமாள் கோயில்கள் உள்ளன. பெருமாள் கோயிலில் கல்ஹாரம், சதுர கருவறை, அர்த்த, முக, முன் மண்டபங்கள் உள்ளன. எறும்பு தின்னி அமைப்புடைய விமானத்தின் கர்ண கூடு, சாலை, பஞ்சாரம், தசாவதார சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மண்டப முகப்பில் கஜலட்சுமி சிற்பத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இருப்பதால், இது பெருமாள் கோயில் என உறுதியாகிறது.அம்மன் சன்னதி சதுர கருவறை, அர்த்த, முன், முக மண்டபங்கள் உள்ளன. விமானத்தில் சிற்பங்கள் ஏதும் இல்லை. இரு கோயில்களின் விமானத்தில் ஆலமரம் வளர்ந்ததால் இடிந்த நிலையில் உள்ளன.

வளாகத்தில் சிதைந்த துாண்கள், பலி பீடம், கல் தொட்டி, சதுர கிணறு உள்ளன. 700 ஆண்டுகள் தொன்மையான பாண்டியர் கோயில் என நிரூபிக்கும் விதமாக கருவறை நிலை கால்களில் சிறு நாகபந்தத்துடன் கோஷ்ட சிற்பங்களின்றி கல்ஹாரம், போதிகை, சுவர், துாண்களில் இரட்டை மீன், தும்பிக்கை மூக்கு மீன் சின்னங்கள் உள்ளன.

இக்கோயிலில் 4 யானைகள் இருந்ததாகவும், விழாக்களில் பெரிய தேர் சுற்றி வந்ததாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர். இக்கோயில் மதுரையின் மிகப்பெரிய ஆன்மிக தலமாக இருந்துள்ளது. இடிந்து வரும் கோயிலை தமிழக அரசு புனரமைத்து, காணாமல் போன அம்மன், பெருமாள் மூலவர் சிலைகளை மீட்க வேண்டும்.

கோவில் பற்றிய தகவல்களை கோயில் கட்டடக்கலை, சிற்பக்கலை ஆய்வாளர் தேவி, வரலாற்று ஆய்வாளர்கள் அறிவு செல்வம், நவீன் குமார், ஜெயசிவா ஆகியோர் வெளியிட்டனர்.

Input from: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News