பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ரத்து தவறான முடிவு.. ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!
பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டது தவறான முடிவு என பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
By : Thangavelu
பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டது தவறான முடிவு என பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும், இனி அந்த பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாளுவார் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு ஆங்கிலேயர் காலத்திலிருந்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பள்ளிக் கல்வி இயக்ககம் தான். கல்வி வளர்ச்சியை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் சீர்திருத்தங்களை செய்வதில் தவறில்லை. கடந்த காலங்களில் அவ்வாறு செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் தான் கல்வி வளர்ச்சிக்கு வகை செய்தன. ஆனால், பள்ளிக்கல்வி இயக்ககத்தை ஆணையரகமாக மாற்றி, அதை இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் ஒப்படைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையை இந்நடவடிக்கை சிதைத்து விடும்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் நிர்வாகத் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. பள்ளிக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நந்தகுமார் என்ற இ.ஆ.ப அதிகாரியும் நேர்மையும், திறமையும் நிறைந்தவர் தான். ஆனால், பள்ளிக்கல்வியை நிர்வகிக்க இவை போதாது. பள்ளிக்கல்வி இயக்குனர் என்பது அதிகாரம் சார்ந்த பணியல்லஞ். மாறாக அனுபவம் சார்ந்த பணியாகும். சாதாரண ஆசிரியராக பணியைத் தொடங்கும் ஒருவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இணை இயக்குனர், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குனர் என பல்வேறு பொறுப்புகளை சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்பை நிர்வகிக்க முடியும். இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சிறந்த நிர்வாகியாக இருந்தால் கூட பள்ளிக்கல்வியின் நுணுக்கங்களை புரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்ற முடியாது.
பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி மட்டுமின்றி மெட்ரிக் பள்ளி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், முறைசாரா கல்வி இயக்குனர், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் அகற்றப்பட்டு அவர்கள் அனைவரும் கையாண்டு வந்த பொறுப்புகள் பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் அதை விட பெரிய அபத்தம் இருக்க முடியாது. பள்ளிக்கல்வித் துறைக்கு முந்தைய ஆட்சியில் ஆணையர் நியமனம் செய்யப்பட்ட போது, அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. புதிய அரசில் ஆணையர் பதவி நீக்கப்பட்டிருந்தால் அது தான் சீர்திருத்தமாக இருந்திருக்கும். மாறாக, அனுபவத்தின் அடிப்படையிலான அனைத்துப் பதவிகளையும் ஒழித்து விட்டு, பள்ளிக் கல்வி குறித்து எந்த அனுபவமும் இல்லாத இ.ஆ.ப. அதிகாரியிடம் எல்லா அதிகாரங்களையும் ஒப்படைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து ஆசிரியர் பணி அனுபவம் கொண்டவர்கள் தான் பள்ளிக்கல்வி இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர். தமிழகத்தின் பள்ளிக்கல்வி வரலாற்றில் மிகச்சிறந்த நிர்வாகியாக போற்றப்படுபவர் நெ.து.சுந்தரவடிவேலு ஆவார். காமராசர் முதலமைச்சராக இருந்த போது பொதுக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்ட அவரது காலத்தில் தான் பல்லாயிரக்கணக்கான புதிய பள்ளிகள் தொடங்கப் பட்டன. அப்போதைய கல்வித் தேவையை நிறைவேற்றுவதற்காக ஓராசிரியர் பள்ளிகள் என்ற புதிய தத்துவம் உருவாக்கப்பட்டு, ஏராளமான ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, படித்து விட்டு வேலையின்றி இருந்த இளைஞர்கள் அவற்றில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர் தான் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்படுவதற்கு மூளையாக இருந்தார். அவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அல்லஞ் ஆசிரியர், கல்வியாளர் என்பதை தமிழக அரசு நினைவில் கொண்டு செயல்படுவது கல்விக்கு நன்மை பயக்கும்.
தமிழக அரசுத் துறைகளின் செயலாளர்களாக இ.ஆ.ப. அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சட்டத்துறை, சட்டப்பேரவை ஆகியவற்றின் செயலாளர்களாக இ.ஆ.ப அதிகாரிகள் நியமனம் செய்யபடுவதில்லை; சம்பந்தப்பட்ட துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள். மத்திய அரசின் விண்வெளித்துறை செயலாளராக இ.ஆ.ப. அதிகாரி நியமிக்கப்படுவதில்லை. மாறாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( இஸ்ரோ) தலைவராக இருக்கும் விஞ்ஞானி தான் விண்வெளித் துறை செயலாளர் பதவியையும் கூடுதலாக வகிப்பார். காரணம்ஞ். இவை அனுபவத்தின் அடிப்படையிலான பணிகள். அவற்றை அதிகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நிர்வகிக்க முடியாது என்பது தான்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவியில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைத் தான் நியமிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அஷோக் வர்தன் ஷெட்டி, தேவ. ஜோதி ஜெகராஜன், பி. கோலப்பன் ஆகியோர் அடுத்தடுத்து பதிவாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அந்த அமைப்பு நடைமுறைக்கு ஒத்துவராது என்று உணரப்பட்டு, பின்னாளில் கைவிடப்பட்டது. அதேபோல், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியில் ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இதுவரை இருந்த நிலையே தொடரும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.