ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்க இந்து விரோத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வற்புறுத்தல்.!
ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்க இந்து விரோத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வற்புறுத்தல்.!
By : Yendhizhai Krishnan
தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக் கணக்கான கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. பிற மத வழிபாட்டுத் தலங்களும் அவற்றுக்கு உரிமையான சொத்துக்களும் அந்தந்த மதத்தினராலேயே நிர்வகிக்கப்படும் நிலையில் இந்துக்களுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுவது ஏன் என்ற கேள்வி தற்போது வலுப்பெற்று வருகிறது.
கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க சட்டரீதியான போராட்டமும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. வாரம் ஒரு முறையாவது கோவில் சொத்துக்களில் அறநிலையத்துறை செய்யும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுதான் உள்ளன. சமீபத்தில் கூட உயர்நீதிமன்றம் கோவில்களில் உள்ள ஒரு செங்கலைக் கூட அறநிலையத்துறை அகற்றக்கூடாது என்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்களை கோவில் சார்ந்த பயன்பாட்டுக்கு தவிர வேறு எந்த செயல்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் கடுமையான உத்தரவை பிறப்பித்தது.
நிலைமை இப்படி இருக்கையில் தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க,க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இந்து விரோத அரசியல் கட்சிகள் பல்லாண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கோவில் நிலங்களை வரைமுறைப்படுத்தி பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். ஆனால் இது பற்றி முன்னரே தெரிந்து உஷாரான இந்து முன்னணியினரும் பா.ஜ.கவினரும் கோவில் நிலத்துக்கு பட்டா வழங்கி ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். இதனால் பட்டா வழங்கும் முயற்சி கைவிடப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டே அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இந்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புக்கள் இதை எதிர்த்து நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. பா.ஜ.கவும் கோவில் நிலங்களுக்கு பட்டா அளிப்பதை எதிர்த்து வழக்கு தெடுத்திருந்தது. இந்நிலையில் "ஏழை மக்கள் குடியிருந்து வரும் கோயில் நிலத்துக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இதனை ஏற்க மறுத்து பா.ஜ.கவினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒரு வருட காலமாக அரசாணையை செயல்படுத்த விடாமல் தடையாணை பெற்றுள்ளது துரோகம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோவில் நிலங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளாலும் கோவில் சொத்தில் எந்த வகையிலும் பாத்தியதை இல்லாத பிற மதத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. உதாரணமாக திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறிய வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள தோனீஸ்வரர் திருக்கோவில் மற்றும் சுந்தரபெருமாள் திருக்கோவில் ஆகிய இரண்டுக்கும் சொந்தமான 40 ஏக்கர் விவசாய நிலத்தில் வைகோவின் உறவினரான ரவி என்பவர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலங்களின் தற்போதைய நிலை என்று தெரியாத நிலையில் நிலத்தை சர்வே செய்து மோசடியாக பட்டா வழங்கப்பட்ட பின் அதை ரத்து செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்திருந்தது.
அதேபோல் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள வைகோவின் தந்தை வையாபுரி பெயரில் உள்ள பள்ளி நிர்வாகம் 15,84,720 கோவிலுக்கு ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது. இவ்வாறான பின்னணி கொண்டவர்கள் தான் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு அதை சட்டப்பூர்வமாக்கி பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நில அபகரிப்பு மோசடியை எதிர்த்து குரல் கொடுத்துவரும் பாஜகவை ஏழைகளின் நலனுக்கு எதிராக இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான நிலத்தில் கோவில் இருக்கும் பட்சத்தில் பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் இடித்து தள்ளும் அரசு கோவில் நிலங்கள் என்று வரும்போது மட்டும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வண்ணம் செயல்படுவது ஏன் என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. மேலும் இத்தகைய நடவடிக்கைகள் அறநிலையத் துறையைக் கலைத்து இந்துக்களின் கையிலேயே கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுவடையச் செய்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.