மாணவி தற்கொலை வழக்கில் கைதான சகாயமேரிக்கு ஜாமீன்: சிறையில் சால்வை அணிவித்து வரவேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ!
கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளர் சகாயமேரி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கிய சம்பவம் மாணவியின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
By : Thangavelu
தஞ்சையில் மதமாற்ற கொடுமையால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த குற்றவாளியான சகயாமேரியை சால்வை அணிவித்து வரவேற்ற திமுக எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ்.
அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு லாவண்யா என்ற 17 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை இருந்தது. அவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி என்ற ஊரில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ பள்ளியான தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் படிக்க வைத்திருந்தார். தற்போது 12ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா கடந்த மாதம் திடீரென்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்களிடம் பேசிய வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதாவது பள்ளி விடுதியில் உள்ள சகாயமேரி என்பவர் தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் மாற முடியாது என்று கூறியதால் தனக்கு ஏராளமான பணிகளை செய்ய வைத்தார். இதனால் தனக்கு மிகப்பெரிய மனஉளைச்சல் ஆனது. இதன் காரணமாக நான் விஷம் அருந்தினேன் எனக் கூறினார். மாணவியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மரணம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிகிடைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இதன் பின்னரே விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைதான விடுதி வார்டன் சகாயமேரி ஜாமீன் கோரி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனையடுத்து சகாயமேரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். குற்றவாளியை ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து வரவேற்பது இந்துக்கள் மத்தியில் மதமாற்றம் தொடர்பாக மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது.
Source, Image Courtesy: Samayam