சட்டப்பேரவையில் வானதி சீனிவாசன் மற்றும் நிதி அமைச்சர் தியாகராஜன் இடையே நடைபெற்ற காரசார விவாதம் !
Debate between Vanathi Srinivasan and PTR.
By : G Pradeep
வானதி சீனிவாசன்: சமீப காலமாக மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்கிறீர்கள். ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசனையை மாற்ற முடியாது.
அமைச்சர் தியாகராஜன்: ரோஜாப்பூ மல்லிகையாகும் என நாங்கள் கூறவில்லை. மத்திய அரசின் வரி மற்றும் ஏனைய அதிகாரத்தை எதிர்த்து பேசிய முதல் நபர், நரேந்திர மோடி. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, 'ஜி.எஸ்.டி., வரி, மாநில உரிமையை பறிக்கும்' என்றார்.எங்கள் கொள்கை, ஒரே கொள்கை தான். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒரே கொள்கை தான்; அது மாறாது. பலருக்கு அப்படி இல்லை.
வானதி சீனிவாசன்: மத்திய அரசின் வரி விகிதத்தை தாண்டி, மாநில அரசு அதிக நிதி பெற்றுள்ளது. 2010ல் தமிழகத்துக்கு 928.3 கோடி ரூபாய் கிடைத்தது. 2021ல் 10 ஆயிரத்து 389 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமைச்சர் தியாகராஜன்: ரூபாய் மதிப்பை ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில் பண மதிப்பு மாறிக் கொண்டே இருக்கும். எனவே, சதவீதம் அடிப்படையில் பேசுங்கள்; ஒப்பிட்டு பார்க்க சரியாக இருக்கும்.இவர், கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வாக வந்துள்ளாரா அல்லது அரசியல் கட்சி பாதுகாவலராக வந்துள்ளாரா அல்லது மத்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ளாரா? தொகுதி குறித்து பேசாமல், மத்திய அரசை பாதுகாப்பது குறித்து பேசுகிறார்.
வானதி சீனிவாசன்: கற்றுக் கொண்டதை கற்றுக் கொடுப்பதற்கு, சட்டசபை ஒன்றும் வகுப்பறை அல்ல. தன்னுடைய கண்டுபிடிப்புகளை நிறுவ, இது அறிவியல் ஆய்வகமும் அல்ல. கடந்த ஆண்டுகளில், எந்தெந்த வழிகளில் எந்தெந்த திட்டங்கள் வழியே, தமிழகத்துக்கு நிதியுதவி வந்தது என்ற தகவலை அளிக்கிறேன். சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக, 3,500 கிலோ மீட்டர் துார சாலைகளுக்கு, 1.03 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது.