மத்திய அரச பாருங்க அவங்களை மாதிரி நடந்துக்கோங்க - ஸ்டாலினுக்கு அறிவுரை கூறும் ராமதாஸ் !
Breaking News.
By : Mohan Raj
"நிதி நெருக்கடி என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுப்பது நியாயம் அல்ல" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாதது, அவர்களிடையே பெரும் மனக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல.
நிதி நெருக்கடி என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுப்பது நியாயம் அல்ல. தமிழக அரசைப் போலவே மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், மத்திய அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை வழங்கப்படாத மூன்று தவணைகளுக்கும் சேர்த்து 11% உயர்வு வழங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 3% உயர்த்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க'வின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பு எதுவும் மானியக் கோரிக்கையில் வெளியிடப்படாதது தமிழகம் எங்கும் உள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழக அரசு நிர்வாகத்தின் அசைக்க முடியாத அங்கமாக திகழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம் ஆகும்" என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.