தி.மு.க கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு !
சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் உரசியதால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான் !
By : G Pradeep
அமைச்சர் பொன்மொடியை வரவேற்க விழுப்புரத்தில் தி மு க கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தி மு க கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமைச்சர் பொன்மொடி விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அவரை வெகு விமர்சியாக வரவேற்க கழக உடன் பிறப்புகள் தயாராகின. வரவேற்பின் அங்கமாக கட்சியின் கொடி கம்பம் நடும் பணியை தொடங்கினர். அப்பொழுது தான் அந்த சோக நிகழ்வு நடந்தேறியது !
ஏகாம்பரம் என்பவரின் பதிமூன்று வயதான தினேஷ் என்ற சிறுவன் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தான். சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தில் உரசியதால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான் !
இச் சம்பவம் விழுப்புரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று 2019 இல் சென்னை பள்ளிக்கரணையில் ஆ.தி.மு.க கட்சி பேனர் ஒன்று இருபத்தி மூன்று வயதான சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்து அந்த பெண் உயிரிழந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்த சம்பவத்தை அப்போது எதிர் கட்சியாக இருந்த முதல்வர் ஸ்டாலின் கண்டித்ததையும் நினைவு கூற வேண்டும்.
இந்த கண்டனம் தற்போது செயல் வடிவமாக மாறாதது ஏன் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.