விநாயகர் சதுர்த்தி விழா : அரசுக்கு கலைஞர்கள் கோரிக்கை!
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
By : Shiva
தமிழக அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுமா என்ற சந்தேகத்தில் விநாயகர் சிலை செய்யும் கலைஞர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவின் போது இந்துக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை எப்போதும் போல் கொண்டாட முடியாமல் போனது. இதனால் விநாயகர் சிலையை வடிவமைத்து விற்பனை செய்யும் கலைஞர்கள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர்.
இந்த ஆண்டும் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களைத் திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் விநாயகர் சதுர்த்தி விற்பனையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மண்பாண்ட கலைஞர்கள் தாங்கள் தயார் செய்து வைத்துள்ள விநாயகர் சிலை விற்பனை அடையுமா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். உள்ளூர் மண்பாண்ட தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து மண்பாண்டத் தொழிலில் ஈடுபடுவோரும் விற்பனையில் ஏற்பட்ட மந்தம் காரணமாக கவலை அடைந்துள்ளனர்.
எனவே அரசு வழிகாட்டுதலின்படி களிமண்ணால் செய்யப்பட்டும் ரசாயனம் அற்ற சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத சிலைகளை தயாரிப்பவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உடன் விழாவை சிறப்பாக நடத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Source : தமிழ் இந்து