காசு கட்டீட்டு, அந்தாப்ல போ! அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி "ஓசி"யில் டேல்கேட் கடப்பது அறவே ஒழிந்தது!
காசு கட்டீட்டு, அந்தாப்ல போ! அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி "ஓசி"யில் டேல்கேட் கடப்பது அறவே ஒழிந்தது!
By : Muruganandham M
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை வாகனங்கள் எளிதாக கடந்து செல்லும் வகையில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு இருந்தது. எரிபொருள் வீணாவதை தடுக்கவும், நேர விரயத்தை குறைக்கவும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாஸ்டேக் பெறாத வாகனங்களுக்கு 2 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து இதுநாள் வரை பாஸ்டேக் வாங்காதவர்களும் அதனை வாங்கி தங்களது வாகனங்களில் ஒட்டியுள்ளனர்.
பாஸ்டேக் முறை அமலாவதற்கு முன்பு பல்வேறு அரசு துறைகளை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி பணம் கட்டாமல் சென்று வந்தனர். ஆனால் பாஸ்டேக் முறை கட்டாயமான பிறகு, அது போன்று யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை கடப்பவர்கள், இனி பணம் கட்டாமல் செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் அமலுக்கு வந்த பிறகு கட்டண வசூல் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ஒவ்வொரு விதமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பெரிய சுங்கச் சாவடிகளில் இதைவிட கூடுதலாக தினசரி வசூல் இருக்கும். அப்படி பார்த்தால் 48 சுங்கச்சாவடிகளிலும் ஒருநாள் வசூல், பல கோடியை எட்டியிருக்கும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் இன்னும் கூடுதலாகவும், சுங்க கட்டணம் வசூலாகி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டை கட்டணம் வசூலிக்கப்படுவதால், தெளிவான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ‘பாஸ்டேக்’ வாங்காதவர்கள் இன்னும் 10 சதவீதம் அளவுக்கே இருப்பதாகவும், இதனால் குறைந்த அளவிலேயே சுங்கச் சாவடிகளில் ரொக்கமாக வசூலாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.