மத்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: கோவையில் துவங்கி வைத்த மத்திய இணை அமைச்சர்!
மத்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சோதனை அடிப்படையில் கோவையிலிருந்து துவங்கப்பட்டது.
By : Bharathi Latha
மத்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சோதனை அடிப்படையில் கோவையிலிருந்து துவங்கப்படும் என திறன் மேம்பாட்டு & தொழில்முனைவோர், மின்னணு & தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பட்ஜெட் குறித்த முக்கிய அம்சங்களை விளக்கினார். அதனைத் தொடர்ந்து கொடிசியா வளாகத்தில், கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தொழிற் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய இணை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொழில் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களை அமல் படுத்தியுள்ளதாகவும், மத்திய அரசு அறிவித்துள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம், சோதனை அடிப்படையில் கோவையில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். 'கடந்த 9 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் என அனைத்து தரப்பு தொழில்துறையினரும் வளர்ச்சி அடையும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதும் தொழில் நிறுவனங்களின் முக்கிய கடமையாகும்.
அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களோடு இணைந்து தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்த மத்திய அரசு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த தொழில்துறையினர் தங்களது ஆலோசனை மற்றும் கருத்துக்களை மத்திய இணை அமைச்சரிடம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Input & Image courtesy: News