தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள்: மத்திய குழுவினர் 2வது நாளாக ஆய்வு!
வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர், இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
By : Thangavelu
தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. குறிப்பாக சென்னை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் மழையால் அதிகமான பாதிப்புகளுக்கு உள்ளானது. இதனிடையே மழை வெள்ள பாதிப்புகளை கடந்த 2வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்த மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான குழுவினர், இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 23) இரண்டாவது நாளாக ஒரு குழுவினர் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறது. அதனை முடித்துக்கொண்டு 2 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறது. இதன் பின்னர் மாலை நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. இவை அனைத்தும் முடித்துக்கொண்டு சென்னை திரும்ப உள்ளனர்.
மேலும், மற்றொரு குழு வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு இரவு சென்னை திரும்ப உள்ளனர். இதன் பின்னர் நாளை முதலமைச்சருடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai