நாளை முதல் பேருந்துகளுக்கு கட்டுப்பாடு: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.!
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
By : Thangavelu
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் (மே 6) நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நாளை முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சென்னை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.