கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய தனியார் ஜவுளி கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய தனியார் ஜவுளி கடைக்கு சீல்!
By : Kathir Webdesk
கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக சென்னையில் உள்ள தனியார் ஜவுளி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் தனியார் ஜவுளிக்கடையான குமரன் சில்க்ஸில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் அலை மோதியது. அதனை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் கொரோனா சமயத்தில் சமூக இடைவெளி இல்லாமல் இவ்வளவு கூட்டமா என்ற விமர்சனங்களுடன் வீடியோ வைரலானது. இது சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு வந்ததையடுத்து அந்த கடையை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்த போது அங்கு அரசு விதிமுறைகளை மீறி கூட்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதுகாப்பு அம்சங்களும் அங்கே செய்யப்படாமல் இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனால் அந்த கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரதமர் மோடி தனது உரையில் இன்று தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது மற்றும் கைகளை அடிக்கடி கழுவுவது ஆகியவற்றைத் தொடர்ந்து கடைபிடிக்குமாறு அவர் அறிவுறுத்தி இருந்தார்.
மேலும் கொரோனா தொற்று இன்னும் நம்மிடமிருந்து போகவில்லை என்றும் கொரோனாவின் பாதிப்பு தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக எண்ணி மக்கள் அலட்சியமாக செயல்படாமல் அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை கடைபிடித்து நடந்து கொள்ளுமாறும் மோடி தனது உரையில் அறிவுறுத்தி இருந்தார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஜவுளிக்கடைகளில் கூடுவதை இந்த ஆண்டு மட்டும் தவிர்க்க அரசு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பது மக்களின் நலனுக்காகவே என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மீன் சந்தையிலும் கடைகளிலும் கூடுவதை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒருவர் பாதிக்கப்பட்டோமானால் அது நம்மை மட்டும் பாதிக்காமல் நம் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும் என்ற எண்ணம் மக்கள் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர்.