மாணவன் இறந்த பின்பும் அலட்சியமாக செயல்படும் 5 ஸ்டார் பிரியாணி ஓட்டல்: மீண்டும் கரப்பான் பூச்சியுடன் சமைத்த கொடுமை!
By : Thangavelu
ஆரணியில் 5 ஸ்டார் பிரியாணி சென்டர் பெயரில் நடத்தப்பட்ட உணவகத்தில் தம்பதி ஒருவர் சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது போன்று தொடர்ந்து பிரியாணி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் மணிக்கூண்டு அருகே 5 ஸ்டார் பிரியாணி சென்டர் என்கின்ற உணவம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் நேற்று (ஜூலை 1) நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவருடைய மனைவி ஜான்சி ராணி உள்ளிட்டோர் பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன், மட்டன் பிரியாணி மற்றும் மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது மூர்த்தி சாப்பிட்ட பிரியாணி தட்டில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்துள்ளதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக கடையின் மேலாளரிடம் மூர்த்தி கேட்டுள்ளார். அவர் சரியான விளக்கம் அளிக்காமல் சாப்பிட்ட உணவுகளுக்கு பில் வாங்கிக்கொண்டுள்ளார். இதன் பின்னர் ஆரணி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் மீது இதுவரையில் உணவகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த மே மாதம் இதே உணவகத்தில் தந்தூரி பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னரும் அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் அந்த உணவகத்திற்கு அனுமதி வழங்கி வருகின்றனர். தொடர்ந்து தரமற்ற முறையில் உணவுகளை வழங்கி வரும் 5 ஸ்டார் உணவகத்தின் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Puthiyathalaimurai