கொரோனாவால் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்.!
கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

By : Thangavelu
கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அதில் ஒரு வழக்கில் கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கிற்கு, நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் குழந்தைகளின் நலன்காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மற்றொரு மனுவில் கோவை சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறையாததால், அங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த இரண்டு மனுக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடரக்கூடிய பொதுநல வழக்குகள் விளம்பரத்துக்காகவே தாக்கல் செய்யப்படுகிறது என கூறினர்.
மேலும், கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.எனவே உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும், மத்திய, மாநில அரசுகளால் தொடரக்கூடிய மக்கள் நலப்பணிகள் நீதிமன்றம் தலையீடு இல்லாமல் நடைபெற வேண்டும் என குறிப்பிட்டனர்.
