கோவையில் நெகிழ்ச்சி: நகைகளை அடகு வைத்து, மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகளை வாங்கிக்கொடுத்த தம்பதி.!
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று வாழ்ந்து வரும் வேளையில், சில மனிதர்களும் தாங்களாகவே முன்வந்து மனிதாபிமான முறையில் உதவுவதை பார்க்க முடிகிறது.

By : Thangavelu
கோவையில் தம்பதி ஒருவர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, ராம்நகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பூசி போடுவதற்கு சென்றுள்ளனர். அப்போது வெயில் கொடுமையால் கொரோனா நோயாளிகள் சிரமப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தங்களது நகைகளை ரூ.2.20 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்து, அந்த பணத்தில் 100 மின் விசிறிகளை வாங்கி கொண்டு மருத்துவமனையில் அளித்துள்ளனர். அப்போது மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் சந்தித்த அவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று கூறி, மின்விசிரிகளை கொடுத்துள்ளனர்.
அப்போது, ஒரு சில மின்விசிறிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். மீதி எஞ்சிய மின்விசிறிகளை திரும்ப கொடுத்துவிட்டு தங்களது நகைகளை மீட்டுக்கொள்ளும்படி கல்லூரி முதல்வர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மின்விசிறிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படவேண்டும் என்று தம்பதி உறுதியுடன் இருந்துள்ளனர்.
இதன் பின்னர் சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் தம்பதியிடம் பேசியுள்ளார். உங்களது அன்புக்கு பணிந்து மின்விசிறிகளை பெற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக்கொண்டால் போதும் என்று வாழ்ந்து வரும் வேளையில், சில மனிதர்களும் தாங்களாகவே முன்வந்து மனிதாபிமான முறையில் உதவுவதை பார்க்க முடிகிறது.
