Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்தவத்தில் தீண்டாமையின் உச்சகட்டம் - கேட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலித் பாதிரியார்கள்.!

கிறிஸ்தவத்தில் தீண்டாமையின் உச்சகட்டம் - கேட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலித் பாதிரியார்கள்.!

கிறிஸ்தவத்தில் தீண்டாமையின் உச்சகட்டம் - கேட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட தலித் பாதிரியார்கள்.!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  7 Dec 2020 9:14 AM GMT

இந்து மதத்தில் சாதிப் பாகுபாடு நிலவுகிறது, குறிப்பிட்ட சமூகத்தினர் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள் என்று கூறி தான் பல அப்பாவி இந்துக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அங்கு அவர்களுக்கு சமத்துவம் கிடைப்பதில்லை. சில நாட்களுக்கு முன் தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் தலித் ஆயர்களுக்கு தகுந்த பிரிதிநிதித்துவம் தரப்படுவதில்லை என்று போராட்டம் நடத்தினர்.

கடந்த டிசம்பர் 3 அன்று பாண்டிச்சேரி- கடலூர் திருச்சபை தலைமையகத்தில் தலித் கத்தோலிக்க தலைவர்கள் சிலர் தங்களது சமூகத்தைச் சேர்ந்த பாதிரியார்களை சந்திக்க முற்பட்டனர். தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் மேரி ஜானும், மேலும் சில பாதிரியார்களும் திருச்சபை நிர்வாகத்திடம் திருச்சபையில் நிலவும் தீண்டாமை குறித்து பேச முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் நிர்வாகத்தைச் சேர்ந்த கிரெகோரி லூயிஸ் ஜோசப் என்ற பாதிரியார் அவர்களை உள்ளே நுழைய விடாமல் கேட்டைப் பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தலித் கிறிஸ்தவ பிரிதிநிதிகள் காவல் துறையினரின் உதவியுடன் கேட்டைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். நவம்பர் 30 அன்று ஏற்கனவே ஒரு‌முறை பேராயரைச் சந்திக்க முயன்ற மேரி ஜான், "எங்கள் போதகர்களைச் சந்திக்க எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது" என்று கூறியுள்ளார்.

தலித் பாதிரியார்களுக்கு பதவி வழங்குவதில் கடைபிடிக்கப்படும் தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாடு பற்றி திருச்சபை நிர்வாகத்துடன் பேசுவதற்காகவே தாங்கள் சென்றதாக தலித் கிறிஸ்தவ விடுதலை இயக்கத்தினர் கூறுகின்றனர். சமீபத்தில் திருச்சபை நிர்வாகத்தில் நிதி சம்பந்தமான விஷயங்களைக் கவனிக்கும் பதவி காலியானதாகவும் அந்தப் பதவிக்கு தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர்களை சந்திக்கவே மறுத்த தேர்வுக் குழுவினர் மறுநாளே உடனடியாகக் கூட்டம் கூட்டி ஆல்பர்ட் பெலிக்ஸ் என்ற பாதிரியாரை அந்த பதவிக்கு தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது. கிரெகோரி நவம்பர் 13ஆம் தேதி பதவி விலகிய நிலையில் டிசம்பர் 1ல் இருந்து ஆல்பர்ட் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த பதவி உட்பட திருச்சபையில் இருக்கும் 42 பதவிகளில் ஒன்றில் கூட தலித் பாதிரியார்கள் நியமிக்கப்படவில்லை என்று தலித் கிறிஸ்தவ அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர். உடல்நிலை காரணமாக 2 மாதங்கள் விடுப்பில் செல்வதாக பேராயர் நவம்பர் 24 அன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவர் இல்லாத போது நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள பாதிரியார் அருளானந்தத்தை நியமித்துச் சென்றுள்ளார்.

அதற்கு முன் நிதிப் பொறுப்பு வழங்கும் பதவிக்கு ஆள் தேர்ந்தெடுப்பதை 2 மாதம் தள்ளி வைப்பதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பின்னர் அவர் இல்லாத போது தேர்வுக் குழு கூட்டம் நடத்தி அந்த பதவிக்கு புதியவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து அச்சம் தெரிவித்து 23 தலித் பாதிரியார்கள் புகார் கடிதம் அளித்துள்ளனர்.

முன்னரே மார்ச் மாதத்தில் திருச்சபை நிர்வாகத்தில் நிலவும் சாதிப் பாகுபாட்டைக் களையுமாறு பேராயரிடம் தலித் கிறிஸ்தவ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்ச் 9 அன்று பேராயரைச் சந்தித்து தலித் அல்லாத கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும்‌ இடங்களில் தலித் பாதிரிகளை நியமிப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டி சமத்துவத்தை நிலை நாட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிகாரம் உள்ள பொறுப்புகள் தலித்களுக்கு எட்டக்கனியாகவே இருப்பதாக இவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோவில்களில் பயிற்சி பெற்ற பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும் என்றும் பிற சாதியினர் மட்டுமல்ல பிராமணர்கள் கூட கருவறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற உண்மை தெரிந்தும் தி.மு.க, தி.க, வி.சி.க, ம.தி.மு.க கட்சிகள் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்துகின்றன. ஆனால் கிறிஸ்தவத்தில் வெளிப்படையாகவே நடக்கும் சாதிப்‌ பாகுபாடு‌ பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை.

இதைப் பார்த்தாவது இந்து மக்கள் விழிப்படைவார்களா; நடுநிலையாளர்கள் உண்மையில் பாகுபாடு பார்ப்பது யார் என்று உணர்வார்களா என்று உண்மை தெரிந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source : https://thecommunemag.com/dalit-christians-treated-as-untouchables-in-pondicherry-archdiocese/
Next Story
கதிர் தொகுப்பு
Trending News