ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடனுக்கு பிள்ளைகளை வீட்டில் வைத்து பூட்டிய கடன்தாரர்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடனை திருப்பி தர இயலாததால் 3 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து அடைத்த கடன்தாரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
By : Thangavelu
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடனை திருப்பி தர இயலாததால் 3 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து அடைத்த கடன்தாரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரணி, பெரியார் நகரை சேர்ந்தவர் ரகு, இவரது மனைவி அஞ்சுகம். இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளது. ரகுவின் மனைவி அஞ்சுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். ரகு கொரோனா தொற்று காரணமாக வேலை செல்ல முடியாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது பாரதியார் தெருவை சேர்ந்த கேஷ்டிராஜா என்பவரிடம் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு 2 லட்சத்து 50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதனிடையே ரகுவிற்கு வேலை இல்லாத காரணத்தினால் வட்டி கட்டமுடியாமல் அவதியுற்று வந்துள்ளார். இதனிடையே கடன் கொடுத்த கேஷ்டிராஜா கடனை திருப்பித் தருமாறு கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை ரகுவும், அவரது மனைவி அஞ்சுகமும் வேலைக்கு சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வீட்டிற்கு சென்ற கேஷ்டிராஜா பணம் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் வீட்டில் இருந்த ரகுவின் 3 பெண் பிள்ளைகள் மற்றும் உறவு பெண் பிள்ளையான யோகேஸ்வரி ஆகிய 4 பெண் பிள்ளைகளை வீட்டில் உள்ளேயே வைத்து வீட்டின் கதவை பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
இது பற்றிய தகவலை ரகு மற்றும் அஞ்சுகத்திற்கு அவரது பிள்ளைகள் செல்போன் மூலமாக கூறியுள்ளனர். இதனால் பதறிப்போன அஞ்சுகம் ஆரணி நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரகு வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்காத காரணத்தினால் கடன் கொடுத்த உறவினர் பூட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே போலீசார் கேஷ்டிராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கொடுக்காத காரணத்தினால் பெண் பிள்ளைகளுடன் வீட்டை பூட்டிய சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Source, Image Courtesy: Puthiyathalamurai
https://www.puthiyathalaimurai.com/newsview/113703/Debtor-who-keeps-children-in-the-house-and-locked-up-for-the-debt-got-by-the-parents