உளவுத்துறை எச்சரித்தும், அலட்சியப்படுத்தியதா போலீஸ்? கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணி என்ன?
By : Thangavelu
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்புகள் நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறி கலவரத்தில் முடிவடைந்தது. சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி காலை அந்த மாணவி விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் அளித்தது.
மேலும், படிக்க சொல்லி வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாக கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாணவியின் பெற்றோர் முன்பு ஒரு கடிதத்தை படித்து காண்பித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் பெற்றோர் கொலை செய்துவிட்டதாக புகார் கூறினர். இதன் பின்னர் மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளி மீது விசாரணை நடத்தி உடனடியாக கோட்டாச்சியர் சீல் வைக்க வேண்டும் என்று சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மாணவியின் மரணத்திற்கு உரிய பதில் சொல்லாத வரையில் உடல்களை வாங்க மறுத்து பெற்றோர்கள் அறவழியில் போராடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 17) பள்ளிக்கு எதிராக கனியாமூரில் மாணவர் அமைப்பினர் ஒன்று கூடி ஊர்வலமாக பள்ளியை நோக்கி சென்றனர். அப்போது மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோஷத்துடன் சென்ற போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரை தள்ளிவிட்டு பள்ளிக்குள் நுழைந்து பேருந்து மற்றும் பொருட்களை அடித்து நாசப்படுத்தினர். அங்கிருந்த பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் போராட்டம் போர்க்களமாக மாறியது. போராட்டத்தை 4 மணி நேரத்திற்கு பின்னர்தான் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அருகாமையில் உள்ள மாவட்டங்களில் போலீசார வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மாலை பள்ளி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்தது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் 4000 பேர் கூடியது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 'மாணவிக்கு நீதி வேண்டும்' என்று நேற்று ஒரு வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டு அதன் லிங்க் மற்ற வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள், காவல்துறையினர் என்று பலர் இணைந்திருந்தனர். அந்த குழுவில் இன்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து 10க்கும் அதிகமான மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், மாணவர்கள், கள்ளக்குறிச்சியில் குவிந்தனர். உளவுப் பிரிவின் கண்காணிப்பு மற்றும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி 4,000 போராட்டக்காரர்கள் அங்கு எப்படி குவிந்தனர் என்பது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் பேசப்பட்டது. சம்பவம் நடைபெற இருந்த 13ம் தேதியில் இருந்து விழுப்புரம் மாவட்ட உளவுத்துறை எங்களை எச்சரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அதனை இங்குள்ள அதிகாரிகள் மற்றும் மேல் அதிகாரிகள் யாருமே கண்டுக்கொள்ளாமல் விட்டனர். மேலும், மாணவியின் தாய் தனது மகளுக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்த வாருங்கள் என்று வாட்ஸ் அப் குழு மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். இதனை உளவுத்துறை எங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை எங்களின் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
மேலும், போதுமான போலீஸ் இல்லாதது உண்மைதான். இருந்தபோதிலும் இருக்கும் போலீஸை வைத்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம். ஆனால் எங்களை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குவித்து விட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் கிராமங்களின் வழியாக வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அனைவரும் மாணவர்களே கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan