தருமபுரி அருகே கொட்டும் மழையிலும் தீவன மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற ஆட்சியர்!
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினையும், பாடி ஊராட்சி மாதிரி பள்ளியின் அருகில் மேய்ச்சல் தரை மேம்படுத்திட தீவன மரக்கன்றுகள் நடும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
By : Thangavelu
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கு 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினையும், பாடி ஊராட்சி மாதிரி பள்ளியின் அருகில் மேய்ச்சல் தரை மேம்படுத்திட தீவன மரக்கன்றுகள் நடும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.
பாடி ஊராட்சியில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டம் (NADCP) திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 2வது சுற்று துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த விழாவில் கூடுதல் ஆட்சியர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய சேர்மேன் மகேஸ்வரி பெரியசாமி மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் இளங்கோவன், துணை இயக்குநர் டாக்டர் வேடியப்பன், உதவி இயக்குனர்கள் டாக்டர் சண்முகசுந்தரம், மணிமாறன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தசரதன், பிரபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி பாடி ஊராட்சிக்குட்பட்ட 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள மேய்ச்சல்தார் நிலத்தில் கால்நடைகளுக்கான தீவனப்பயிர் மற்றும் மரங்களை நட்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மரக்கன்றை நட்டு வைத்தார். அவரை தொடர்ந்து தருமபுரி முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோரும் மரக்கன்று நட்டு வைத்தனர். இந்த திட்டத்தால் பாடி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை இந்த மேய்ச்சல்தார் நிலங்களில் மேய்ச்சலுக்காக விடலாம். இதனால் ஒரே இடத்தில் கால்நடைகளை மேய்ச்சி செல்லலாம், இதன் மூலம் கால்நடைகளுக்கு பசுமை புற்கள் எளிதாக கிடைக்கும் என்று ஆட்சியர் கூறினார். இதே போன்ற திட்டங்கள் மற்ற பகுதிகளிலும் தொடங்கி வைத்தால் மே மாதங்களில் கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மரம் நடும் விழாவின்போது 100 நாட்கள் வேலை செய்யும் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டனர். இதனை அறிந்த ஆட்சியர் ச.திவ்யதர்சினி பெண்களிடம் செல்போனை வாங்கி அவரே புகைப்படம் எடுத்துக்கொடுத்தார். இதனால் பெண்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.