தருமபுரி: கொரோனா விதிமுறைகளை மீறிய 441 பேர் மீது வழக்குப்பதிவு.!
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கப்பட்டு வருகிறது.
By : Thangavelu
தருமபுரி மாவட்டத்தில் முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 441 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசு உத்தரவுகளை பின்பற்றாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்ட எஸ்.பி. பிரவேஸ்குமார் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும், வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2 நாட்களாக இந்த பைன் விதிக்கப்பட்டு வருகிறது. 409 பேர் முகக்கவசம் அணியாமல் வந்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.81,800 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.17,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 441 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.