தருமபுரி தி.மு.க. எம்.பி-யின் ஸ்கேன் மையத்தில் கூடுதல் கட்டணம்? - அதிர்ச்சி குற்றச்சாட்டு!
தருமபுரியில் திமுக எம்.பி., செந்தில்குமார் நடத்தி வரும் மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அதிமுக, பாமக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
By : Thangavelu
தருமபுரியில் திமுக எம்.பி., செந்தில்குமார் நடத்தி வரும் மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அ.தி.மு.க, பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தருமபுரி தொகுதி பாமக எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ., அ.கோவிந்தசாமி ஆகியோர் தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பாமக எம்.எல்.ஏ., பேசியதாவது: தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள மயானத்தில் தினமும் 20 முதல் 30 இறந்தவர்களின் உடல்களை எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே அதனை உடனடியாக மின் மயானமாக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும், கொரோனா பரிசோதனை முடிவுகள் காலதாமதமாக கிடைக்கிறது பரிசோதனை முடிவுகள் 2 நாட்களில் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பேசுகையில், பொது மக்கள் அரசு மருத்துவமனைகளில் கொரானா சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் கொரானா சிசிக்சை பெறுபவர்களை கடைசி நேரத்தில் முடியாது என்று வெளியே அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு செல்வதால், அரசு மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது. எனவே பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு முன்வரவேண்டும்.
மேலும், தருமபுரி திமுக எம்.பி., செந்தில்குமார் நடத்திவரும் ஸ்கேன் மையத்தில் கூடுதல் பணம் பெறுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அதனை அரசு உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.