தருமபுரி: 100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கு கொரோனா காய்ச்சல் முகாம்.!
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 150க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தினசரி பாதிப்பாக 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 150க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஏராளமானோர்கள் கூடுகின்றனர்.
தருமபுரி மட்டுமின்றி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனிடையே மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கிராமம் தோறும் பரிசோதனையை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.
அதன்படி நல்லம்பள்ளி தாலுகா, பாலவாடி ஊராட்சியில் 100 நாள் வேலை செய்து வந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு சளி மாதிரி, உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டது.
இந்த முகாமில் பாலவாடி ஊராட்சி மன்றத்தலைவர் கணேசன் மற்றும் நல்லம்பள்ளி ஒன்றிய பிடிஓ அ.வீரபத்ரன், சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன், சிவா மற்றும் ஊராட்சி செயலாளர் ஜம்பேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களை திரட்டும் பணியில் பாலவாடி மகளிர் திட்டக்குழு இணைந்து செயல்பட்டது.