தருமபுரியில் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு.!
மாட்லாம்பட்டி கிராமத்தில் அவருடன் தொடர்பில் இருந்த 27 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
By : Thangavelu
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சி, மாட்லாம்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்றுவிட்டு ஊர் திரும்பினார்.
இந்நிலையில், அப்பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் மிகுந்த அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே கடந்த 10ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து மாட்லாம்பட்டி கிராமத்தில் அவருடன் தொடர்பில் இருந்த 27 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அனைவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மாட்லாம்பட்டி கிராமம் முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டது.
மேலும், தூய்மை பணியாளர்களை கொண்டு அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டது. மற்றவர்களுக்கும் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.