ஆளுங்கட்சி கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை என வன்முறை தலை விரித்தாடும் திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகள் கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை கலாச்சாரம் தலைதூக்குவதால் அங்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

By : Mohan Raj
திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகள் கட்டப்பஞ்சாயத்து, கூலிப்படை கலாச்சாரம் தலைதூக்குவதால் அங்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கந்தக்கோட்டை என கிராமத்தில் கத்தி, அரிவாள், பெட்ரோல் குண்டு உள்ளிட்ட பொருள்களுடன் நள்ளிரவில் 30 பேர் கொண்ட கும்பல் குடியிருப்புகளை சேதப்படுத்தி ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் தாக்கி, தடுக்க முயன்ற ஐந்துக்கு மேற்பட்ட நபர்களை தாக்கியும் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துறையினர் கூறியதாவது, 'நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா இவர் மினி வேனில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். திங்கள் கிழமை காலை 8 மணிக்கு பள்ளப்பட்டி'யை அடுத்த கந்தப்பக்கோட்டை பகுதியில் மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அவர் மீன் ஏற்றி வந்த மினி வேன் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்தது. அவ்வழியே பைக்கில் வந்த அப்பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் மீன் வேனை ஓரமாக நிறுத்தி வியாபாரம் செய்யுமாறு கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது, ஆதித்யா அங்கிருந்து சென்றுவிட்டார் வியாபாரத்தை முடித்துவிட்டு அருகில் உள்ள தோப்பில் நண்பர்களுடன் சேர்ந்து மீன் வேனை கழுவிக் கொண்டு இருந்தனர்.
வாக்குவாத பிரச்சினைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கலைச்செல்வன் தரப்பு ஆதித்யா இருந்த தோப்பிற்கு வந்து அவரது மீன் வேனை அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக இரு தரப்பும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொழுது அந்த பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்துக் கொள்வதாக கூறி விட்டார். ஆனால் அன்று மாலையே இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை இருந்துள்ளது.
பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை தாக்கி விட்டதாக ஆத்திரப்பட்ட ஆதித்யா பேச்சுவார்த்தைக்கு கட்டப்படாமல் மதுரை, வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய பகுதியில் இருந்து 30 பேர் கொண்ட கூலிப்படையை நிலக்கோட்டை வரவழைத்துள்ளார். அவர்கள் திரைப்பட பாணியில் ஊருக்குள் புகுந்து பட்டா கத்தி வாள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தெருத்தெருவாக சுற்றி வீடுகளை சேதப்படுத்தியுள்ளனர் மேலும் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோ'வை அடித்து நொறுக்கியுள்ளனர். தடுக்க முயன்ற 6 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர் அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். திண்டுக்கல் தேனீ சரக காவல்துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் நிலத்தகராறு, கொடுக்கல் வாங்கல் பிரச்சினை, காதல் விவகாரம் உள்ளிட்ட குடும்ப பிரச்சினைகள், வியாபாரப் பிரச்சினையை உள்ளிட்டவை கட்டப்பஞ்சாயத்து மூலமாகவே தீர்க்கப்படுகின்றன. காவல் நிலையம் பிரச்சனை போனாலும் சில ஆளுங்கட்சி பிரமுகர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடக்கிறது போலீசார் தலையிடாமல் இருக்க உரிய முறைப்படி நடக்கிறது இதனால் பிரச்சினை முடியாமல் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விடுகிறது' என்றார்.
நிலக்கோட்டை பகுதியில் கூலிப் படையினரை அழைத்து வந்து சம்பவம் செய்வது புதிதல்ல கடந்த மாதம் கூட நிலக்கோட்டை அருகே குள்ளிசெட்டிபட்டியில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக்காக 16 பேர் கொண்ட குழுவினர் கிராமத்தையே சூறையாடிவிட்டு சென்றனர். இதேபோல் வத்தலகுண்டு பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் விவகாரத்திலும் கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கூலிப்படையினர் பத்தாயிரம் ரூபாய்க்கு வரவழைக்கப்பட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த குறிப்பினை கலாச்சாரத்தை தனது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
