பெரம்பலூர்: 2வது முறையாக கோயில் சிலைகள் உடைத்த சமூக விரோதிகள்: நேரில் பார்வையிட்ட பா.ஜ.க. பிரமுகர் அஸ்வத்தாமன்!
பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சுடுமண் சிற்பம் சிலைகள் 2வது முறையாக மர்ம நபர்கள் உடைக்கப்பட்ட இடத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அணியின் மாநில துணை தலைவர் அஸ்வத்தாமன் பார்வையிட்டுள்ளார்.
By : Thangavelu
பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சுடுமண் சிற்பம் சிலைகள் 2வது முறையாக மர்ம நபர்கள் உடைக்கப்பட்ட இடத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அணியின் மாநில துணை தலைவர் அஸ்வத்தாமன் பார்வையிட்டுள்ளார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சாமி சிலைகள் மிகவும் மோசமான முறையில் உடைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நாங்கள் ஏற்கனவே கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளோம். இந்த விஷயத்தில் திமுக அரசு வழக்கம் போல இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது.
மேலும் கோயிலை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் காவல்துறையினர் இந்துக்கள் தானே என்று மிகவும் அஜாக்கிரதையாக இருந்ததன் விளைவே மீண்டும் அதே கோயிலை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் செல்லியம்மன் சிலையை மட்டும் சேதப்படுத்திவிட்டு மற்ற சிலைகளை சிறிய அளவில் சேதப்படுத்தினர். இந்த முறை சமூக விரோதிகள் பெரும்பாலான சிலைகளை உடைத்து தரைமட்டமாக்கி விட்டனர். நாங்க போலீசாரிடம் வலியுறுத்தியது போல நடந்த சம்பவம் பற்றி முறையாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. சும்மா பெயர் அளவிற்கு ஒருவரை பிடித்து இவர்தான் குற்றவாளி என்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கண்துடைப்பு நாடகத்தை நடத்திவிட்டனர்.
இதனிடையே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்திருந்தால் தற்போது 15 அடி உயரமுள்ள பெரியசாமி, பைரவர் உள்ளிட்ட சிலைகளை முழுமையாக இன்று தகர்க்கப்பட்டிருக்காது. இதனை நாங்கள் ஏன் வலியுறுத்துகிறோம் என்றால் ஆந்திர மாநிலத்தில் 19 மாதங்களில் 128 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மெத்தனமான நடவடிக்கையால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.
அதே போன்று தமிழகத்திலும் மெத்தனமாகவே இந்த விஷயத்தில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். சிறுவாச்சூரில் இந்த இடம் முனிவர்கள், சித்தர்கள் வாழ்ந்த இடம். இங்குள்ள கோயில்கள் அனைத்தும் சக்தி பீடங்களை போன்று செயல்படுபவை. இந்துக்களின் மனதில் பதியப்பட்டுள்ள நம்பிக்கை தகர்க்கும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற கொடுரமான செயல்களில் ஈடுபட்டு இந்துக்களின் மனதை புன்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் இந்த சமூக விரோத செயலை செய்துள்ளனர். எனவே ஆந்திராவில் 178 கோயில்கள் உடைக்கப்படும் வரை திமுக அரசு அமைதி காக்க போகிறதா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசியபோது, இது போன்ற சம்பவங்கள் இப்போது மட்டுமல்ல தென்மாவட்டங்களிலும் ஜூன் மற்றம் ஜூலை மாதங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பதை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது. எனவே போலீசார் மீண்டும் மெத்தன போக்கு இல்லாமல் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறினார்.
Source:Maalaimurasu
Image Courtesy: Twiter