கந்தபுராண பாடலில் 'சைவ நீதி'யை 'சமூகநீதி' என்று மாற்றிய தி.மு.க! ஆதீனம் கண்டனம்!
கந்தபுராண பாடலில் 'சைவ நீதி'யை 'சமூகநீதி' என்று மாற்றிய தி.மு.க! ஆதீனம் கண்டனம்!

கந்த புராணத்தை வைத்து கட்சி விளம்பரம் தேட முயன்ற தி.மு.க.,வுக்கு காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இந்து என்ற சொல்லைக் கேட்டாலே எரிகிறது" என்று சிலரைப் பேச வைத்து சிரித்து ரசித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில்களில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது, இந்து சமய நூல்களை புகழ் மாலை புனையப் பயன்படுத்துவது என்று கிளம்பி இருக்கிறார்.
ஆன்மீகப் பெரியோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த போதும் இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது தொடர்ந்து வருகிறது. இந்து என்று ஒரு மதமே கிடையாது என்று தி.மு.க கிறிஸ்துமஸ் விழாவில் கலையரசி நடராஜன் என்பவர் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது கந்த புராணப் பாடலைக் கொச்சைப்படுத்தும் விதமாக தி.மு.க பிரச்சாரப் பாடலாக பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்த ‛வான்முகில் வழாதுபெய்க, மலிவளம் சுரக்க மன்னர் கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்' என்று கந்தபுராணத்தில் வரும் மங்கள வாழ்த்துப் பாடலுடன் தி.மு.கவினர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களை இணைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
#WeRejectADMK pic.twitter.com/TL51Xw2ov3
— Dhivya Srinivasan (@dhivyasridivi) December 20, 2020
மன்னர் என்ற சொல்லை மாற்றி 'மைந்தன்' கோன்முறை அரசு என்ற வரிக்கு கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படத்தைக் காட்டியும் நான்மறை அறங்கள் ஓங்க என்பதற்கு பதிலாக 'ஐம்பெரும் அறங்கள் ஓங்க' என்றும் நற்றவம் வேள்வி மல்க என்பதற்கு பதிலாக
'நன்னெறி தொழில்கள் மல்க' என்றும் 'சைவ நீதி' என்பதற்கு பதிலாக 'சமூக நீதி' என்றும் வார்த்தைகளை தி.மு.க தேர்தல் பிரச்சார விளம்பரத்துக்கு ஏதுவாக மாற்றி அமைத்து விளம்பரம் செய்து வருகின்றனர்.
இது சைவ சமயப் பெரியோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய காமாட்சிபுரி ஆதீனம், "பெரும்பான்மையான மக்கள் வழிபடும் பாடலை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன. அரசியல் கட்சிகள் தங்களது கொள்கை கோட்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.* என்று எச்சரித்துள்ளார்.
மேலும், அரசியல் கட்சிகள் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களைக் கைவிட வேண்டும் என்றும் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற செயல்களைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தி.மு.க ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் கந்தசஷ்டியை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது கந்தபுராணம் பாடலை தேர்தல் பிரச்சாரமாக டப்பிங் செய்து வெளியிட்டது கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.
With inputs from Dinamalar