புயலால் பாதிக்கப்படுபவர்கள் கவலை வேண்டாம்.. தயார் நிலையில் அம்மா உணவகம்.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!
புயலால் பாதிக்கப்படுபவர்கள் கவலை வேண்டாம்.. தயார் நிலையில் அம்மா உணவகம்.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.!
By : Kathir Webdesk
வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது நாளை மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலானது சென்னைக்கு கிழக்கே 450 கிமீ தொலைவில் 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று மாலை அதிதீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்பதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், புயலால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் ஏற்பாடுகள் செய்துவிட்டது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: ‘புயல் கரையை கடக்கும் போது பாதிக்கப்படும் மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குழுக்கள் அமைத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பட்டு அறை முக்கியமானது. இன்று விழுந்த மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அதற்கான குழுக்கள் மண்டல வாரியாக தனியாக நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை மாநகராட்சியில் 830 எம்.எல்.டி., குடிநீர் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார்.