Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா ஊரடங்கில் தோல்வியடைந்த தமிழக அரசு: ராமதாஸ் கடும் அதிருப்தி.!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா ஊரடங்கில் தோல்வியடைந்த தமிழக அரசு: ராமதாஸ் கடும் அதிருப்தி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2021 10:31 AM GMT

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசு சரிவர நடைமுறைப்படுத்தவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நேற்று 1816 அதிகரித்து, 34,875 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களாக பகுதி நேர ஊரடங்கும், 11 நாட்களாக முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்தும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைவதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுவது குறித்த சந்தேகங்களைத் தான் ஏற்படுத்துகிறது.




தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த 16-ஆம் தேதி முதல் குறையத் தொடங்கியது. 16-ஆம் தேதி 477, 17-ஆம் தேதி 106, 18-ஆம் தேதி 16 என்ற விகிதத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால், கொரோனா தொற்று விரைவில் கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை எழுந்த நிலையில், நேற்று ஒரே நாளில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1816 அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினசரி கொரோனா தொற்று ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடந்த 10 நாட்களில் இது தான் முதல் முறையாகும். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பயனளிக்கும் வகையில் உறுதியாகவும், கடுமையாகவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.




தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 35 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலிடத்தில் உள்ளது. இது பெருமைப்படுவதற்கான செய்தியல்ல. மாறாக அச்சமும், வேதனையும் பட வேண்டிய விஷயமாகும்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட அதே மே 10-ஆம் தேதி தான் கர்நாடகத்திலும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. கேரளத்தில் அதற்கு இரு நாட்கள் முன்பாக மே 8-ஆம் தேதி முழு ஊரடங்கு செயல்பாட்டுக்கு வந்தது. கர்நாடகத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் தினசரி பாதிப்பு 47,930 ஆக இருந்தது. நேற்று அந்த எண்ணிக்கை 34,281 ஆக குறைந்து விட்டது. அதேபோல், கேரளத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாளில் இருந்ததை விட மூன்றில் இரு பங்காக இப்போது குறைந்து விட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 10-ஆம் தேதி 28,978 ஆக இருந்த தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது சுமார் 6 ஆயிரம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் ஊரடங்கு காலத்தில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருவதிலிருந்தே ஊரடங்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை என்பதை ஐயமின்றி உணர்ந்து கொள்ள முடியும்.




கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒரு பயனுள்ள நடவடிக்கை என்பது உலகம் முழுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சென்னையில் தொடங்கி தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை நாள்தோறும் நான் சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழக அரசும் ஊரடங்கு கடுமைப்படுத்தப்படுவதாக தினமும் அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், களத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது தான் உண்மையாகும்.




மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தாலும், மாவட்டத்திற்குள் செல்வதாக இருந்தாலும் வாகனங்கள் இ - பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசும் காவல்துறையும் அறிவித்துள்ளன. ஆனால், நேற்று எனது நண்பர் ஒருவர் கள்ளக்குறிச்சியில் புறப்பட்டு விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைக் கடந்து சென்னைக்கு சென்றிருக்கிறார். இடையில் எந்த இடத்திலும் அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்படவில்லையாம். சென்னையிலும் எந்த சாலையிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாகனங்கள் அணிவகுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த அளவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்னும் எத்தனை வாரங்கள் ஆனாலும் கொரோனா கட்டுக்குள் வராது.

ஊரடங்கு என்பது அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியில் வர முடியாத நிலையை உருவாக்குவது தான். அத்தகைய ஊரடங்கை செயல்படுத்துவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஊரடங்கை உறுதியாக செயல்படுத்த விடாமல் தமிழக அரசை தடுக்கும் சக்தி எது என தெரியவில்லை. ஊரடங்கு விஷயத்தில் காட்டப்படும் அலட்சியம் பேரழிவை ஏற்படுத்தும்.




கொரோனா பாதிப்புகள் குறித்தும், உயிரிழப்புகள் குறித்தும் ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல், ஊரடங்கு என்பதற்கு இலக்கணம் வகுக்கும் வகையில் மிகவும் உறுதியாக தமிழகத்தில் ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; நான் மீண்டும், மீண்டும் கூறி வருவதைப் போல தேவைப்பட்டால் துணை இராணுவத்தை அழைக்க வேண்டும். அதன்மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News