அதி தீவிர புயல்.. சென்னை மக்களுக்கு ஆவின் மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டுள்ளது.!
அதி தீவிர புயல்.. சென்னை மக்களுக்கு ஆவின் மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டுள்ளது.!
By : Kathir Webdesk
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது இன்று மாலை தொடங்கி அதிகாலை வரை மாமல்லபுரம் -காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்கிறது.
தற்போது புயல் அதி தீவிர புயலாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, நிவர் புயல் கரையைக் கடக்கும் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையே அறிவித்தார். மேலும், வானிலை மையம் அலுவலகத்தில் நேரடியாக சென்று புயல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், புயல் முன்னெச்சரிக்கையாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என கூறினார்.
இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் சென்னையில் பாதிக்கப்படாது என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலால் பால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க ஆவின் பாலகங்கள் மற்றும் டெப்போக்களில் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது தவிர நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலமும் நகரின் பிரதான பகுதிகளில் பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.