பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பொதுமக்களுக்கு வருவாய்த்துறை எச்சரிக்கை.!
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By : Thangavelu
பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் மழை பெய்ததால் அங்கு உள்ள கலவகுண்டா அணைகள் நிரம்பி வருகின்றன. இதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் வேலூர் மாவட்டம் பொன்னையாற்றில் பரவலாக வெள்ளம் வருகின்றது. இதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் அதிகளவு ஆற்றங்கரைக்கு செல்கின்றனர்.
இதனிடையே காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா அணை விரைவில் முழுவதுமாக நிரம்பும் நிலையில் உள்ளது. தற்போது ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட எல்லையில் நுழைந்துள்ள நீர் விரைவில் பொன்னை அணைக்கட்டு பகுதிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொன்னை ஆற்றங்கரையில் இருபுறமும் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வருவாய்த்துறையினர் மூலமாக தண்டோரோ மூலம் எச்சரிக்கையும் விடப்பட்டு வருகிறது.
