திருநெல்வேலி மாநகராட்சியில் லட்சக்கணக்கில் பணம் முறைகேடு: டீசல் இல்லாமல் குப்பை லாரிகள் நிற்கும் அவலம்!
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள குப்பை லாரிகளுக்கு டீசல் வழங்க முடியாது என்று பங்குகள் கூறியதால் குப்பை எடுக்காமல் குவிந்து கிடக்கிறது
By : Thangavelu
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள குப்பை லாரிகளுக்கு டீசல் வழங்க முடியாது என்று பங்குகள் கூறியதால் குப்பை எடுக்காமல் குவிந்து கிடக்கிறது. அதே போன்று தனியார் நிறுவன டிரைவர்களும் குப்பை லாரிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியை பொறுத்த வரையில் 55 வார்டுகள் இருக்கும் நிலையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து 170 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 130 டன் ராமயன்பட்டி கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. மாநகராட்சியில் 20க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.
அனைத்து லாரிகளுக்கும் இரண்டு தனியார் பெட்ரோல் பங்குகளில் டீசல் நிரப்பப்படுகிறது. அவற்றுக்கு தற்போது லட்சக்கணக்கில் மாநகராட்சி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் ரூ.8 லட்சத்துக்கும் மேல் பாக்கி சென்றதால் ஒரு தனியார் பங்க் மாநகராட்சி லாரிகளுக்கு டீசல் வழங்க முடியாது என்று கூறியுள்ளது. இதன் காரணமாக மேலப்பாளையம் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக குப்பை லாரிகள் குப்பை அள்ளுவதற்கு அனுப்பாமல் மாநகராட்சி அலுவலகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சோன்டா என்ற தனியார் நிறுவனமும் குப்பை அள்ளும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்திற்கும் மாநகராட்சி சார்பில் லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்துள்ளது. இதனால் அந்நிறுவனத்தை சேர்ந்த லாரி டிரைவர்களும் குப்பை அள்ளாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மேலப்பாளையம் வார்டு உட்பட மாநகராட்சியின் இதரப்பகுதிகளிலும் குப்பை அள்ளாமல் தேங்கி கிடக்கிறது. இது போன்று தொடர்ந்து நீடித்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது பற்றி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மோகன் கூறும்போது, மாநகராட்சி குப்பை லாரிகளுக்கு டீசல் நிரப்புவதில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஓடாமல் உள்ள லாரிகளுக்கு டீசல் போட்டதாக பில் வாங்கி கணக்கு காண்பிப்பதால் தான் லட்சக்கணக்கில் பாக்கி வரும் சூழல் உருவாகிறது என்றார்.
Source, Image Courtesy: Dinamalar