தி.மு.க வினர் மீது வழக்குகள் போடப்பட்டதா? டி.ஜி.பி யிடம் கேள்வி எழுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழகத்தின் 15வது ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி போலீஸ் டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து பேசி வருகின்றார்.
By : Thangavelu
தமிழகத்தின் 15வது ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி போலீஸ் டிஜிபி மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து பேசி வருகின்றார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பு ஏற்கும் முன்னரே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி சென்னைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ம் தேதி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார். வழக்கமாக புதிய ஆளுநர் பொறுப்பேற்றால் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுவது வழக்கம்தான். இந்நிலையில், ஆளுநர் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் அழைத்து பேசியுள்ள புகைப்படம் தற்போது வெளியில் வந்துள்ளது.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில் வரவழைத்து அரை மணி நேரம் பேசியுள்ளார். அப்போது மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டதா என்றும் கேட்டுள்ளார்.
மேலும், இன்று (செப்டம்பர் 22ம் தேதி) காலை உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் அழைத்து ஆளுநர் பேசியுள்ளார். தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் அரசு அதிகாரிகளிடம் பணிகள் குறித்து நேரடியாக கேள்வி எழுப்பி வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Source, Image Courtesy: Minnambalam