ஏழு வயதில் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி.!
ஏழு வயதில் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி.!
By : Bharathi Latha
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 7 வயது சிறுமி 5 நிமிடங்களில் 3 தென்னை மரங்களில் ஏறி அசத்தி வருகிறார். இந்த சிறுமியின் பெயர் ஹெப்சிஹேனா இன்னும் இவர் இரண்டாம் வகுப்பு தான் படிக்கிறார். மேலும் கூடுதல் பயிற்சி பெற்று கின்னஸ் சாதனை புரிய குடும்பத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விக்கிரமசிங்கபுரம் மணி நகரம் பசுக்கிடைவிளையை சேர்ந்தவர் மார்ட்டீன் விஜயதுரை, இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு சாம் ஆல்வின் என்ற மகனும், ஹெப்சிஹேனா என்ற மகளும் உள்ளனர். சாம்ஆல்வின் 5ம் வகுப்பு, ஹெப்சிஹேனா 2ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மார்ட்டீன் விஜயதுரை பாபநாசத்தில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் 4 தென்னை மரங்களை வளர்த்து வருகிறார்.
தற்போது கொரோனா தொற்றால் பள்ளிகள் திறக்க படாத இதன் காரணமாக மார்ட்டீன் விஜயதுரை தனது மகள் ஹேப்சிஹேனாவுக்கு கடந்த ஒரு மாதமாக தென்னை மரத்தில் ஏறுவதற்கு பயிற்சி கொடுத்து வந்தார். தற்போது யாருடைய உதவியும் இன்றி கிட்டத்தட்ட சுமார் 25அடி உயரம் கொண்ட தென்னை மரத்தில் தனி ஒருவராக ஏறி அசத்தி வருகிறார் ஹேப்சிஹேனா. அத்துடன் 5 நிமிடத்தில் 25 அடி உயரமுள்ள 3 தென்னை மரங்களில் மிக வேகமாக ஏறி இறங்குகிறார்.
இதுபற்றி இவருடைய தந்தை மார்ட்டீன் விஜயதுரையின் சகோதரர் ஜெஸ்வின் கூறுகையில், "ஹெப்சிஹேனா 5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி இறங்குகிறார். இதைவிட இன்னும் வேகமாக ஏறுவதற்கு புது பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பம். இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறினார்.