Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே ஏரியில் பாதி தண்ணீர்.. பாதி வறட்சி.. அரியலூரில் இந்த நிலைமை.!

ஒரே ஏரியில் பாதி தண்ணீர்.. பாதி வறட்சி.. அரியலூரில் இந்த நிலைமை.!

ஒரே ஏரியில் பாதி தண்ணீர்.. பாதி வறட்சி.. அரியலூரில் இந்த நிலைமை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Dec 2020 6:14 PM GMT

அரியலூர் மாவட்டம் டி.பழூர் என்ற ஊரில் எமன் ஏரி என்ற பெயரில் ஏரி உள்ளது. இந்த ஏரியை டி.பழூர் ஊராட்சி மற்றும் சிந்தாமணி ஊராட்சி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் 40 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி குட்டை போல தற்போது காட்சியளிக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிரம்பி கடல் போன்று காட்சி அளித்துள்ளது. ஆழம் அதிகமுள்ள இந்த ஏரியில் ஏராளமானோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனால், எமன் ஏரி என்ற பெயர் இந்த ஏரிக்கு உருவானது.

இந்நிலையில், சமீபத்தில் குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றன. அரசு நிர்ணயித்த ஆழத்தை விட மிக அதிக ஆழத்திற்கு ஏரி மண் தோண்டப்பட்டதாக புகார் எழுந்தது. இங்கு எடுக்கப்பட்ட மண், கும்பகோணத்தில் நடைபெறும் சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்தாக சொல்லப்பட்டது.

இதற்கிடையே, இந்த எமன் ஏரியை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வீட்டை கோடு போட்டு பிரிப்பது போல, ஏரிக்கு நடுவே மண் மேடு அமைத்து இரண்டாக கூறு போட்டு பிரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எமன் ஏரியை ஆரம்பகாலத்தில் இரு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களும் பொதுவாக பயன்படுத்தி வந்தனர். சிந்தாமணி மக்கள் வடக்கு புறம் உள்ள படித்துறையையும் டி.பழூர் பொதுமக்கள் தெற்கு புறத்திலுள்ள படித்துறையையும் பயன்படுத்தி வந்தனர்.

ஏரியை இரண்டு ஊருக்கும் ஆளுக்கு பாதி என்று நடுவில் பிரித்து கரை அமைத்ததால், சமீபத்தில் பெய்த கனமழையின் போது கூட எமன் ஏரியில் நீர் நிரம்பவில்லை. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 69 பெரிய நீர்நிலைகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி விட்டன. ஆனால் எமன் ஏரியில் முழங்கால் அளவு தண்ணீர்தான் தேங்கியுள்ளது.

குடிமராமத்து பணியின்போது வரத்து வாய்க்கால்கள் எதையும் சீர் செய்யாததும், ஏரிக்கு நடுவே மண் தடுப்பு ஏற்படுத்தியதும்தான் தண்ணீர் வரத்து இல்லாமல் போனதாக கிராம சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏரியின் நடுவே உருவாக்கப்பட்ட மண் சுவரையும் அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News