ரூபாய் நோட்டுகளில் 'நேதாஜி'! மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரூபாய் நோட்டுகளில் 'நேதாஜி'! மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை அச்சிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய சுதந்திர போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்கு அளப்பரியதாகும் என்றும் இதனால் இந்திய ரூபாய் நோட்டுக்களில் அவர் முகத்தை அச்சிட்டு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதன்மூலம் வழக்கை முடித்து வைத்தது.
மத்திய அரசு ஏற்கனவே சமீபத்தில் வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை 'பராக்ரம் திவாஸ்' என்று அறிவித்து, அதை அரசு விழாவாக கொண்டாடியது. பிரதமர் மோடி அவரே கொல்கத்தாவிற்கு சென்று இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
இந்த செய்திக்கு சமூக வலைதளங்களில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்கு இந்திய விடுதலைப் போரில் ஒப்பிட இயலாத ஒன்று என்றும், ரூபாய் நோட்டுகளின் மூலம் அவரைப் பெருமைப் படுத்துவது ஒரு சிறந்த வழி என்றும் மத்திய அரசு இதை கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேற்குவங்காளத்தில் இந்த வருடம் தேர்தல்கள் நடக்கும் நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டால் பெரும் ஆதரவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.