வங்கி நுழைவாயிலில் கிறிஸ்துவ மத பிரச்சாரம், அதிரடி காட்டிய இந்து முன்னணி !
By : Dhivakar
வங்கிக்கு வருபவர்களிடம் இந்து மதத்திற்கு எதிரான பிரச்சார புத்தகங்கள் வினியோகம் செய்ததற்காக வங்கியின் கட்டட உரிமையாளர் மீது காவல்துறையில் இந்துமுன்னணி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் எஸ்.பி.ஐ., வங்கி இயங்கி வருகிறது. அந்த வங்கி இயங்கி வரும் கட்டிடத்திற்கு சொந்தமானவர் செந்தில். அவர் வங்கியின் நுழைவாயிலில் மேஜை அமைத்து, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹிந்து மதத்திற்கு எதிரான புத்தகங்களை வினியோகம் செய்து வந்துள்ளார்.இதையடுத்து , இந்து முன்னணி எழும்பூர் தொகுதி நிர்வாகிகள், எஸ்.பி.ஐ., வங்கி முன் திரண்டனர். புத்தகங்கள் வழங்கியவர்களை எதிர்த்து கோஷமிட்டனர்.
வேப்பேரி போலீசார் வங்கிக்கு விரைந்து புத்தகங்களை அகற்றினர்.
இந்நிலையில், இது குறித்து காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி எழும்பூர் வட்ட தலைவர் கமல், வேப்பேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் "புரசைவாக்கம் தானா தெருவில், எஸ்.பி.ஐ. வங்கி செயல்படும் கட்டடத்தின் உரிமையாளர் செந்தில், அவரது கூட்டாளி தீபக் ஆகியோர், வங்கியின் நுழைவு வாயிலில், 'இல்லவே இல்லாத இந்து மதம்; ராம ஜென்ம பூமி' உள்ளிட்ட புத்தகங்களை வைத்திருந்தனர்.
ஹிந்து மதத்திற்கு எதிராகவும், இழிவு படுத்தும் விதமாக எழுதப்பட்ட புத்தகங்களையும், கிறிஸ்துவ மதத்திற்கு ஆதரவான புத்தகங்களை, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர். ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அட்டூழியம் செய்து வருகின்றனர். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இப்படி பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் கிறித்துவ மத பிரச்சாரங்கள் நடப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.