திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசவிரோதிகளின் கூடாரம் ! - இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் அதிரடி !
By : Kathir Webdesk
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் "பெரியாரும் இஸ்லாமும்" என்ற பெயரில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை கருத்தரங்கில் பங்கேற்க விடாமல் காவல்துறை தடுத்து நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், "பெரியாரும் இஸ்லாமும்" என்ற ஒரு கருத்தரங்கு அக்டோபர் 27 அன்று நடைபெற திட்டமிட்டிருந்தது. அக் கருத்தரங்கு அழைப்பிதழில் தலைப்பு : பெரியாரும் இஸ்லாமும் சொற்பொழிவாற்றுபவர் : ரியாஸ் அஹமது, புதிய விடியல் பத்திரிகையின் இணை ஆசிரியர். என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அழைப்பிதழில் "அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் தலைமையில், இந்து முன்னணியினர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றனர். அப்பொழுது காவல்துறை அதிகாரி ஒருவர் இந்துமுன்னணி அமைப்பினரை தடுத்து நிறுத்தினார் . இதனால் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதர் அவர்களுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் பெரும் வாக்குவாதம் நடந்தது.
"நாங்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்வது எங்களது உரிமை, நாங்கள் முன்னாள் மாணவர்கள் எங்களை தடுப்பதில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, "அழைப்பிதழில் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் கருத்தரங்கில் பங்கேற்பதற்குச் செல்கிறோம்" என்று இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றால நாதன் காவல் துறை அதிகாரியிடம் வாதிட்டார்.
இதற்கு காவல்துறை அதிகாரி "உங்களுக்கு உள்ளே அனுமதி இல்லை, மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று மழுப்பலாக பதிலளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் அவர்கள் கூறியதாவது : மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் "பெரியாரும் இஸ்லாமும்" என்ற கருத்தரங்கம் நடைபெறுகிறது. "அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் " என்று பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்த பெயரில் தான் நாங்கள் இங்கே வந்துள்ளோம். ஆனால் பல்கலைக்கழக நுழைவாயிலில் காவல்துறையை ஏவிவிட்டு எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து விட்டனர்.
உள்ளே கருத்தரங்கில் என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று எங்களுக்கு தெரியவில்லை, ஆனால் அந்த கருத்தரங்கத்தில் ரியாஸ் அகமது என்பவர் சிறப்புரையாற்றுகிறார் அவர் யார் என்றால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் பத்திரிக்கையான புதிய விடியலின் இணை ஆசிரியர் ஆவார். ஒரு மாநிலத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பின் பத்திரிக்கை ஆசிரியரை அழைத்து ஒரு கருத்தரங்கு நடத்துவது ஒரு பல்கலைக்கழகத்திற்கு உகந்ததல்ல. கருத்தரங்கத்தின் நோக்கமென்ன ? மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்ற எண்ணங்கள் எழுந்து. அதனால் தான் நாங்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்தோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை, எங்களுக்கு அனுமதியை மறுத்து விட்டு தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் பத்திரிகை ஆசிரியருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கேலிக்கூத்தாக இருக்கிறது. கருத்துக்கள் விவாதிக்கப்படவேண்டும் அதுதான் கருத்தரங்கம். கருத்துக் கூற எங்களுக்கு உரிமை இல்லையா ?
இதே பல்கலைக்கழகத்தில் தான் இந்திய ராணுவத்திற்கு எதிராக எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேட் என்ற புத்தகம் மாணவர்களுக்கு பாட புத்தகமாக இணைக்கப்பட்டது. பின்னர் எதிர்ப்பு தெரிவித்த பின் அப்புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டனர். தொடர்ந்து இத்தகைய செயல்களை செய்து வரும் பல்கலைக்கழகத்தைப் பற்றி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளோம்.
தமிழக கல்வி நிலையங்களில் இத்தகைய தேச விரோத கருத்துக்களை பரப்புவதற்காக கருத்தரங்கம் நடத்தப்படுவது பல்வேறு பின்னவிளைவுகளை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.