ஓசூர் இந்து பிரமுகர் கொலை.. பெங்களூரை சேர்ந்த 3 பேர் சரண்.. இவர்கள் பின்னால் யார் உள்ளனர்.!
ஓசூர் இந்து பிரமுகர் கொலை.. பெங்களூரை சேர்ந்த 3 பேர் சரண்.. இவர்கள் பின்னால் யார் உள்ளனர்.!
By : Kathir Webdesk
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அனுமந்த நகரில் வசித்து வந்தவர் நாகராஜ் என்கின்ற வில்லங்கம் நாகராஜ், 45, இவர் தமிழ்நாடு இந்து மகாசபா மாநில செயலாளராக பதவி வகித்து வருகின்றார். மேலும், வில்லங்கம் பத்திரிகையில் நிருபராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நவ.,20ம் தேதி அன்று காலை 8.30 மணியளவில் தனது வீட்டு அருகே நடைபயிற்சி செய்துள்ளார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர்கள் நாகராஜை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதனிடையே ஓசூர் டவுன் டிஎஸ்பி முரளி சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். மேலும், தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நாகராஜ் கொலையில் தொடர்புடைய ரமேஷ் 38, அருண் 27, மற்றும் அபிசேகர் 19, ஆகிய 3 பேர் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு எந்த அமைப்பு உதவியது, மேலும் இவர்களின் நோக்கம் என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.