ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 வருடம் சிறை.. ரூ.1000 அபராதம்!
எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று வருடம் சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
By : Thangavelu
எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று வருடம் சிறை தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும் என்று ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மக்கள் தீபாவளிக்காக புத்தாடைகள் வாங்க சென்னை வந்து செல்வது வழக்கம். இதனால் கடந்த 24ம் தேதி முதல் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. ரயில்களில் கூட்டம் நெருக்கடி காரணமாக எதாவது அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுப்பதற்காக, பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புறநகர் ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பர். அனைத்து நுழைவு வாயில் பகுதியிலும் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், பட்டாசு எடுத்து சென்றால் 3 வருடம் சிறை தண்டனையுடன் 1000 ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும் என்று பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.
Source, Image Courtsy: Dinmalar