இந்தியாவில் வரி வசூலை விரிவுபடுத்த வேண்டும் - நிர்மலா சீதாராமன் திட்டம்!
நாட்டில் நேர்முக மற்றும் மறைமுக வரி வசூலை விரிவுபடுத்தச் செய்ய வேண்டியதின் அவசியத்தை மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
By : Bharathi Latha
சென்னையில் உள்ள அண்ணாநகரில் ரூ 560 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகத்தை இன்று திறந்து வைத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "தற்போது முறையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதன் விளைவாக நம் நாட்டின் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்கள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நேர்முக மற்றும் மறைமுக வரி வசூல் சீரான முறையில் நடைபெற துறை சார்ந்த அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
"அரசு அதிகாரிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்களின் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றும் இத்தகைய நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து நம் நாட்டுக்காக அவர்களது சிறந்த பங்களிப்பை வழங்குவதற்கு வழி வகை செய்யும்" என்றும் அவர் கூறினார்.
இந்த மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகம் தமிழ் மாதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மங்களகரமான மார்கழி மாதத்தில் திறந்து வைக்கப்பட்டு இருப்பது சிறப்பானது ஆகும் என்று கூறிய மத்திய நிதியமைச்சர், கிருஷ்ண பரமாத்மாவிற்கு மிகவும் பிடித்தமான மாதம் மார்கழி என்றார். பாரம்பரியமிக்க, தொன்மையான தமிழ் சங்ககாலத்தை நினைவு கூறும் வகையில் இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு கட்டடத்திற்கும் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்ற பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும் என்றார்.
Input & Image courtesy: PIB