தூங்கிய செவிலியர்! அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை!
By : Thangavelu
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு சரியான மருத்துவம் செய்யாததால் பரிதாபமாக உயிரழிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், சிவாடி அருகே உள்ளது ஊத்துப்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி ஆனந்தி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆனந்தியை பிரசவத்திற்காக அருகில் உள்ள பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து தாயும், குழந்தையும் அங்கேயே சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று (ஜூன் 30) மதியம் பெண் குழந்தைக்கு தடுப்பூசியை செவிலியர் செலுத்தியதாக கூறப்படுகிறது.
பொதுவாக பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினால் அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணிப்பது வழக்கும். அல்லது அந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கான சிறப்பு மருந்தும் அளிப்பார்கள். ஆனால் இந்த பெண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கவனிக்காமல் இருந்துள்ளார். இதனால் குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது.
மேலும் நள்ளிரவு சமயத்தில் செவிலியரை குழந்தையின் உறவினர்கள் கூப்பிட சென்றபோது, செவிலியர் நவநீதம் வெளிப்புறம் செல்லும் கதவையும் பூட்டிவிட்டு அவர் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதனால் வெகுநேரமாக கதவை தட்டியும் செவிலியர் தூக்கத்தில் இருந்து எழாமல் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க யாரும் வராததால் காய்ச்சல் அதிகரித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அலட்சியமாக இருந்த செவிலியர் மற்றும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினாலேயே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது என்ற குற்றச்சாட்டை உறவினர்கள் முன்வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குழந்தை உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்திரவாதத்தை போலீசாரும் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னரே உயிரிழந்த பெண் குழந்தையின் சடலத்தை பெற்றோர் வாங்கி சென்றனர். பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிரிழந்திருப்பது தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தருமபுரி எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.