Kathir News
Begin typing your search above and press return to search.

விநாயகர் கோவிலில் திருமணம் செய்த கி.வீரமணியின் மகன் - ஊருக்கு தான் உபதேசமா?

காதல் திருமணத்தை ஏற்காத தந்தையை எதிர்த்து விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்

விநாயகர் கோவிலில் திருமணம் செய்த கி.வீரமணியின் மகன் - ஊருக்கு தான் உபதேசமா?

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  14 Feb 2021 7:35 AM GMT

கி.வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற திராவிட இயக்க தலைவர்கள் பிற குடும்ப பெண்களின் தாலியை தான் கழற்றுவார்கள் என்றும் தங்கள் குடும்பத்தினரை கழுத்தில் தாலியும் நெற்றியில் குங்குமும் மிளிர மங்களகரமாக வைத்திருப்பார்கள் என்றும் பலரும் விமர்சிப்பது உண்டு. இதை ஆணித்தரமாக நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்ததாக அண்மையில் பா.ஜ.கவில் இணைந்த கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

பா.ஜ.கவில் இணைந்த பின் சென்னை திருவான்மியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது அவர் கூறியதாக சில தகவல்களை தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாத்திகம் பேசும் திராவிட தலைவர்கள் போலிகள் என்றும் திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணியின் மகனுக்கே பிள்ளையார் கோயிலில் தான் திருமணம் நடந்தது என்றும் அவர் கூறியது தெரியவந்துள்ளது.

இந்த திருமணத்துக்கு தான் உதவியது குறித்து கராத்தே தியாகராஜன் விரிவாக தெரிவித்துள்ளார். வீரமணியின் மகன் அன்பு ராஜு. இவர்தான் தற்போது திமுகவின் துணைத் தலைவராகவும் பெரியார் அறக்கட்டளையின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இவர் மலையாளப் பெண் ஒருவரை காதலித்ததாகவும் அவர்களது காதலை வீரமணி ஏற்கவில்லை என்றும் கலப்புமணம் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பிரிப்பதற்காக ஆட்களை அனுப்பியதாகவும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

வீரமணியிடம் இருந்து தப்ப தியாகராஜனின் உதவியை அன்பு நாடியதாகவும் அவர்கள் மறைந்திருக்க தான் உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முயன்ற போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கடலூரில் பதிவு திருமணம் செய்ய முயன்றபோது கலப்புத் திருமணம் என்பதால் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்ய முடியும் என்று பதிவாளர் கூறியுள்ளார்.

இதனால் ஏதாவது ஒரு கோவிலில் திருமணம் செய்து அதற்கான சான்றிதழையும் தருவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கோவிலில் நடக்கும் திருமணங்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகரின் அனுமதி மற்றும் ஒப்புதலும் தேவை. இதற்கு திராவிடர் கழகத்தை சேர்ந்த தியாகு தயங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் வீரமணியின் மகன் அன்பு, காதலியை கைப்பிடிக்க தான் எதற்கும் தயார் என்று கூறி பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே இருந்த வினைதீர்த்த விநாயகர் கோவிலில் திருமணம் செய்துகொண்டு அந்த சான்றிதழை வைத்து உடனடியாக திருமணத்தை பதிவும் செய்திருக்கிறார். இதற்குப் பின் வீரமணி பிடிவாதமாக இருந்ததாகவும், எனவே அவரின் மகனும் மருமகளும் தனிக்குடித்தனம் நடத்தியதாகவும், உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்த பின்னரே வீரமணி அவர்களை வீட்டுக்குள் சேர்த்ததாகவும் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

இந்து மதத்தைப் பற்றியும் நம்பிக்கைகளைப் பற்றியும் இழிவாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் வீரமணி, இந்து கோவிலில் திருமணம் செய்த தனது மகனை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் கோடிக்கணக்கில் சொத்துக்கள் கொண்ட பெரியார் அறக்கட்டளையை நிர்வகிக்க தனது மகனையே நியமித்துள்ளார் என்பது இதிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று பேசியவர்களின் உண்மை முகத்தையும் இந்த நிகழ்வு தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்து எதிர்ப்பும் பகுத்தறிவும் ஊருக்கு மட்டும் தான் என்பதும் தங்களது குடும்பம் என்று வரும்போது திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் தங்களது இயக்கத்துக்கும் கொள்கைகளுக்கு மாறாக நடந்து கொள்வதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மற்றொரு திராவிடர் கழகத் தலைவரான சுப.வீரபாண்டியனின் அண்ணன் மகனின் திருமண பத்திரிகையில் செட்டியார் என்று அவரது சாதி பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசன நிகழ்வின் போது கி.வீரமணி "அத்தி வரதர் எழுந்து நடப்பாரா?' என்று கேட்டார். ஆனால் அவர்‌ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது மகனும் மருமகளும் அவர்‌ நலம் பெற வேண்டும் என்று அத்தி வரதரை தரிசித்ததாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News